Islamic Widget

December 21, 2011

ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்ப்பதே ஒரே வழி - கலெக்டர்!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் நடத்தப்படுகின்ற தேசிய மின்சார சேமிப்பு வார நிறைவு விழா நேற்று நடந்தது.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து இராஜா முத்தையா மன்றம் வரை மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக வந்தனர்.

பேரணியைத் தொடங்கி வைத்து மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் பேசியதாவது: "மின்சாரமே ஒரு தேசத்தின் ஆணிவேர், அடித்தளம் என்பதை அனைவரும் உணரவேண்டும்ருழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம் என்றார் பாட்டுக்கொரு புலவர் பாரதி. அவர் கூறிய உழவுக்கும், தொழிலுக்கும் இன்றைக்கு மின்சாரம் அதிகளவு தேவைப்படுகிறது.

நமது பாரத நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அணைகளும், ஆலைகளுமே நாம் வணங்கும் ஆலயம். அணைகள் நீர்பாசனத்திற்கு மட்டுமின்றி பெரும்பான்மையாக மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. அந்த மின்சாரத்தை பயன்படுத்தியே ஆலைகளில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, இந்த தேசம் மேம்பாடு அடைவதற்கு மின்தேவை மிகவும் அவசியம்.

மின்சாரத்தைச் சேமிக்க நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட அளவிலும், குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும், தேசிய அளவிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மின்பற்றாக்குறை நம்மிடையே எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டின் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் மின்தடை போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட தேவையை நாம் எப்படி சந்திக்க போகிறோம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப சிக்கனமான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த மின்சார பற்றாக்குறையைக் குறைப்பதற்கு ஒரே வழி, நாம் ஆடம்பரமான வாழ்க்கையை தவிர்ப்பது தான். வீடுகள், மாளிகைகள், அரசு அலுவலகங்கள், பொதுதுறை நிறுவனங்களில் 40 வாட்ஸ் குழல் விளக்குகளுக்கு பதிலாக 13 முதல் 18 வாட்ஸ்களை கொண்ட சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்தினால் குறைந்த மின்சார செலவில் அதிக வெளிச்சம் பெறலாம்.

முதலில் இந்த மின்சார சிக்கனத்தை நமது வீடுகளிலிருந்து தொடங்குவோம். மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மாணவர்கள் மூலம் இந்த விழிப்புணர்வு அவர்களது பள்ளிகளிலும், பெற்றோர்களிடத்திலும் பரவும்." இவ்வாறு மாவட்ட ஆட்சி தலைவர் பேசினார்.

இறுதியில் மின்சார சேமிப்பு குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment