புதுடெல்லி:அனைத்துக் கல்வி நிலையங்களிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இடங்களை இலவசக் கல்விக்காக ஒதுக்கித் தரவேண்டும் என்ற அரசின் கட்டாயத்தை சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து அல்-ஃபலா பொறியியல் – தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஜாவத் அஹ்மத் சித்தீகி கூறுகையில், ’சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களை அரசு தலையீடு இல்லாமல் நிர்வகிக்க அரசியல் சட்டம் உறுதி அளித்தாலும் இப்படி ஏதாவதொரு உத்தரவின் மூலம் மூக்கை நுழைப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது’ என்றார்.
டெல்லி கார்மல் கான்வெண்ட் நிர்வாகி சிஸ்டர். நிர்மாலினி கூறுகையில்; சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பையும் மீறி மத்திய அரசு இவ்விதம் தலையிடுவது அப்பட்டமான சட்ட மீறல் ஆகும். ஏழைகளுக்கு இலவசக் கல்வியைத் தரவேண்டிய அரசு தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே இப்படி மற்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி நிலையங்களின் 25% இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்துகிறது’ என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’முதல் முறையாகச் சிறுபான்மைக் கல்வி நிறுவன நிர்வாகிகள் ஒரே அணியாகத் திரண்டுள்ளோம். இதை தேசிய இயக்கமாக விரைவில் மாற்றுவோம்’ என டெல்லி கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாக சபையின் செய்தித் தொடர்பாளர் டாமினிக் இம்மானுவேல் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment