கோவை : கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்டது, அதன் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளி "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான பரபரப்பே இன்னும் அடங்கியபாடில்லை. அதற்குள், மேலும் மூன்று பள்ளிக் குழந்தைகள் திடீரென மாயமாகி மீட்கப்பட்ட சம்பவம், நான்கு மாவட்ட போலீசாரை தலை சுற்ற வைத்தது.
கோவை நகரில் பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடையே ஒருவித பீதி நிலவுகிறது. தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை போனில் தொடர்பு கொண்டார். "எங்களது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் (பெயர், முகவரி விவரம் குறிப்பிட்டு) மர்மமான முறையில் காணாமல் போய்விட்டனர். இவர்களை தேடி ஆட்டோ டிரைவர் மற்றும் பெற்றோர் பள்ளிக்கு வந்துள்ளனர்' என்றார். உஷாரடைந்த கமிஷனர் சைலேந்திரபாபு, மாநகரச் சாலைகள் அனைத்திலும் வாகன சோதனை நடத்த போலீசாருக்கு "ஒயர்லெசில்' உத்தரவிட்டார். இதே உத்தரவு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் போலீசாருக்கும் பிறப்பிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தியும், காணாமல் போன மாணவர்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.
நடந்தது கடத்தலா? மாணவர்கள், அவர்களாகவே எங்காவது கிளம்பிவிட்டார்களா? என்ற சந்தேகம் வலுத்தது. நேரம் ஆக, ஆக போலீசாருக்கு தலை சுற்றியது. காரணம், ஏற்கனவே பள்ளிக் குழந்தைகள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், அவர்களது கண்முன் வந்து நின்றது. இதனால், நான்கு மாவட்ட போலீசார் பம்பரமாக சுழன்று மாணவர்கள் மூவரையும் தேடிக்கொண்டிருக்க... அவர்களோ, ஏதுமறியாதவர்களாக உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவர், மாணவர்களை கண்டுபிடித்து மீட்டார். அதன் பிறகே, போலீசாருக்கு நிம்மதி வந்தது. மூன்று மாணவர்களின் பெற்றோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, தகுந்த அறிவுரைக்கு பின் ஒப்படைக்கப்பட்டனர்.
நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: பள்ளி வகுப்பு மாலை 4 மணிக்கு முடிந்த போது, குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் செல்ல டிரைவர் காத்திருந்தார்; குழந்தைகள் வரவில்லை. அதிர்ச்சிடையந்த டிரைவர், பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்க, பரபரப்பு தொற்றிக்கொண்டது. பள்ளி நிர்வாகத்தினர் எங்களுக்கு போனில் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களின் போது, உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும், என சமீபத்தில் நடந்த பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், துரிதமாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கோவை உள்ளிட்ட நான்கு மாவட்ட போலீசாரையும் உஷார் படுத்தி, மாணவர்களை தேடும் பணியை துவக்கினோம். கடைசியாக, உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மீட்கப்பட்டனர்.
"பள்ளி மாணவர்களான இவர்கள் எதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்?' என, விசாரித்த போது, வியப்பான தகவலை தெரிவித்தனர். தங்களுடன் படிக்கும் சக மாணவர்கள், "மைசூரு அரண்மனை மிகவும் அழகாக இருக்கும்' என்று கூறியதாகவும், அதனால் மைசூரு சென்று அரண்மனையை பார்க்க விரும்பியதாகவும் தெரிவித்தனர். பள்ளியில் இருந்து அவசர, அவசரமாக வீடு திரும்பிய மூன்று மாணவர்களும், சீருடைகளை மாற்றியபின் 1,000 ரூபாய் பணத்தை வீட்டில் எடுத்துக்கொண்டு உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர்; அங்கிருந்து மைசூருவுக்கு செல்ல முடியாது என்பது கூட அவர்களுக்கு தெரியாது. ஒருவேளை இவர்கள் ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி சென்றிருந்தால் போலீஸ், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருக்கும்.
இது போன்ற சம்பவங்கள் தொடராதிருக்க, பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்களது பிள்ளைகளின் அபிலாசைகள் என்ன, என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை பராமரிக்க வேண்டும். குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்கி உரையாடி அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.
Source:dinamalar
November 12, 2010
கோவையில் மீண்டும் "குழந்தைகள் கடத்தல்' பரபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி கைது!
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- ஹதீஸில் பிரார்த்தனைகள்
- ஹஜ் பெருநாள் மதீனா
No comments:
Post a Comment