Islamic Widget

November 28, 2010

கன மழையால் மிதக்கிறது கடலூர் மாவட்டம்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் 197 ஏரிகளில் வாலாஜா, பெருமாள், வெலிங்டன் உட்பட 114 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் 36 ஆயிரம் கன அடியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 41 ஆயிரம் கன அடியும், தென்பெண்ணையாற்றில் 15 ஆயிரம் கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இது தவிர மணிமுக்தா ஆறு, கோமுகி, வெலிங்டன், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. விருத்தாசலம் பகுதியின் முக்கிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. வயலூர் ஏரி, கம்மாபுரம் அடுத்த சம்பு ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி யதால் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

விருத்தாசலம்: மணிமுக்தா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக இப்பகுதியின் முக்கிய ஓடையான மாரி ஓடையில் வெள்ளம் வழிந்து முக்கிய சாலையான விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் வழிந்தோடியது.விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் செம்பளக்குறிச்சி - சின்னவடவாடி வரை அரை கி.மீ., தூரத்திற்கு சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஓடுகிறது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி கடந்தன.விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் ரயில்வே ஜங்ஷன் வழியாக மாற்று பாதையில் வாகனங்கள் சென்றன. இப்பாதையிலும் வெள்ளம் அளவு கடந்து ஓடுவதால் அச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.விருத்தாசலம் - ஸ்ரீமுஷ்ணம் சாலையில் ராஜேந்திரபட்டினம் அருகே சாலையில் வெள்ளம் ஓடுவதால் அந்த வழியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தரைப்பாலம் மூழ்கியது: வெள்ளாற்றில் நீர் வரத்து அதிகமானதால் நான்கு ஷெட்டர்களை தவிர மற்ற ஷெட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. வினாடிக்கு 70 ஆயிரத்து 768 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சென்னிநத்தம், வடக்கு சென்னிநத்தம், கிளாங்காடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கிளாங்காடு, புளியந்தோப்பு அருகே வெள்ளாற்றங்கரையில் நேற்று மாலை 4 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிளாங்காடு கிழக்கு பகுதி வீடுகள், சர்க்கரை ஆலை குடியிருப்பு, குறுக்கு ரோடு, சர்க்கரை ஆலை பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
புவனகிரி ஒன்றியம் கத்தாழை ஊராட்சி கரிவெட்டி பகுதியில் மழை நீருடன் என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்ததால் 250க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.பள்ளிக் கட்டடமும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் தங்குவதற்கு கூட இடமின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். என்.எல்.சி., சுரங்கத்திலிருந்து தண்ணீர் வெளியேற்ற தோண்டப்பட்ட பரவனாறு வாய்க்காலில் இருந்து முறையான வடிகால் வாய்க்கால் தோண்டப்படாததால் வளையமாதேவி ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம், வாழைக்கொல்லை பகுதிகளில் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் உள்ள முருகன்குடி தரைபாலத்திற்கு மேல் 3 அடி உயரத்திறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாசிகுளம், முதுகுளம், பொக்குழி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு வினாடிக்கு 6,201 கன அடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் திட்டக்குடி தரைப்பாலம் அருகே 7.95 கோடி ரூபாய் மதிப்பிலும், முருகன்குடியில் 8.92 கோடி ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.திட்டக்குடி: வெலிங்டன் ஏரியின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில், நேற்று மதியம் வரை 1,575 மில்லியன் கன அடி நீர்ப்பிடிப்பு செய்யப்பட்டது. இதனால் தொழுதூர் அணைக்கட்டிலிருந்து மழைநீர் நிறுத்தப்பட்டு, வெள்ளாற்றில் வினாடிக்கு 6,201 கன அடி வெளியேற்றப்பட்டது.இருப்பினும் வெங்கனூர், அதர்நத்தம் ஓடைகளிலிருந்து நீர்வரத்து வருவதால் ஏரியில் புதியதாக கட்டியுள்ள 1000 மீட்டர் கரையின் நலன் கருதி 1,080 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.உயிரிழப்புக்கள்: சிறகிழந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (70) நேற்று மாலை மனவாய்க்காலில் இறங்கியபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். திருநாரையூர், நலம்புத்தூரில் இரண்டு பசுமாடுகள், கருநாகரநல்லூர், பழஞ்சநல்லூர், வீராணநல்லூரில் 4 ஆடுகள், ஒரு எறுமை மாடு ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தன. லால்பேட்டையில் 4 வீடுகளும், முட்டத்தில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. மேலும் 30 வீடுகள் பகுதி வாரியாக இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அடுத்த கணக்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி மாணிக்கம்(70) வீட்டில் படுத்திருந்த போது சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த வெங்கடேசபுரம் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (16). பருவதராஜகுருகுலம் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மாலை ஊருக்கு அருகே உள்ள காட்டுவாரி மதகில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது அஜித்குமார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

Source:dinamalar photos:pno.news

No comments:

Post a Comment