Islamic Widget

October 04, 2010

ஹிந்து - முஸ்லிம் பிரதிநிதிகள் திடீர் பேச்சு

                                                       

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பிரச்னைக்கு சமரசத் தீர்வுகாண ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் திடீர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

 உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டாலும் மற்றொருபுறம் சமரசத் தீர்வுக்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


ராமஜென்ம பூமி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரான முகமது ஹசீம் அன்சாரி, ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மகந்த் ஞானி தாûஸ ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ஹனுமந்த் கோயிலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

 இந்த திடீர் முயற்சி ராமஜென்ம பூமி பிரச்னையில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மகந்த் ஞானி தாஸ் அகில பாரதிய அகாடா பரிஷத்தின் தலைவராக உள்ளார். பேச்சு விவரம் குறித்து விவரம் எதையும் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

ஆனால், சன்னி மத்திய வக்ஃப் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே நான் மகந்த் ஞானி தாûஸ சந்தித்துப் பேசினேன். பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது குறித்து அப்போது பேசப்பட்டது என்று அன்சாரி கூறினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக 60 ஆண்டுகாலம் நடந்து வந்த சட்டப் போராட்டத்துக்கு அண்மையில் அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு மூலம் தீர்வு கூறப்பட்டிருந்தது.   

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து ஹிந்து மகா சபை, நிர்மோஹி அகாடா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும், குழந்தை வடிவில் ராமர் சிலை இருக்கும் இப்போதைய வழிபாட்டிடம் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும்; இன்னும் 3 மாதங்களுக்கு இப்போதுள்ள நிலையிலேயே இந்த இடம் பராமரிக்கப்பட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள், ஹிந்து மத அமைப்புகள் வரவேற்றாலும் வழக்கில் தொடர்புடைய நிர்மோஹி அகாடாவோ அல்லது சன்னி வக்ஃப் வாரியமோ அல்லது ஹிந்து மகாசபையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

நிர்மோஹி அகாடாவும், சன்னி வக்ஃப் வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணும் வகையில் சன்னி வக்ஃப் வாரியமும் நிர்மோஹி அகாடாவும் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து,அதன்மீது விசாரணை நடந்து தீர்ப்பு வெளிவர இன்னும் கால தாமதம் ஆகும் என்பதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இருதரப்பிலும் கூறப்பட்டது. அயோத்தி பிரச்னை நமக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்வதற்கான தருணம் வந்துள்ளது என்று சன்னி வக்ஃப் வாரியம் சார்பில் பேச்சு நடத்தி அன்சாரி கூறினார்.

இதற்கிடையே இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஸபர்யாப் ஜிலானி கூறினார். அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என்றுதான் என்னிடம் சொல்லப்பட்டது, மற்றபடி சமரசப் பேச்சு குறித்து எனக்கு ஏதும் தெரியாது என்றார் அவர்.

"இது குறித்து வக்ஃப் வாரிய தலைவர் பாரூக்கிடம் பேசினேன். சமரசப் பேச்சு நடத்துமாறு யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். வாரிய உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல், இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று பாரூக் கூறியதாகவும் ஜிலானி தெரிவித்தார்.

 இதற்கிடையே,சமரசத் தீர்வுக்கான முயற்சிகளை அகாடா பரிஷத் தொடங்கி உள்ளதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ன்று நிர்மோஹி அகாடா அமைப்பைச் சேர்ந்த மகந்த் பாஸ்கர் தாஸ் கூறினார்.

source: dinamani

No comments:

Post a Comment