முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் ஆகியவற்றிற்காக உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க நேரிடுகிறது. அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தான் மனுக்கள் வாங்கப்படும் என்று அலுவலகத்தில் பெரிய கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். அதுவும் 3 மணி நேரம் அவர்களுக்கு வேலை. அந்த வேலையையும் ஒழுங்காக செய்கிறார்களா என்றால் இல்லை.
விடுமுறை எடுத்துக் கொண்டு வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள், ஒரு மணி நேரம் கழித்துக் கவுண்ட்டரில் தனது மனுவை கொடுக்கும் போது இந்த மனுவை இங்கே வாங்க மாட்டோம் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். ஒரு மணி நேரம் காத்திருந்த மக்கள், வேறொருவரிடம் மனுக் கொடுக்க செல்கிறார்கள். அங்கும் அவர்களது மனு நிராகரிக்கப்படுகிறது. இப்படி அங்கு செல், இங்கே செல் என்று அலைகழிக்கப்படும் பொதுமக்கள், கடைசியில் விரக்தியில் குடும்ப அட்டையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு பணிபுரியும் அலுவலர்கள் நடந்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட அவலங்களை வில்லிவாக்கத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் கண்கூடாக காணமுடிந்தது.
மனுவை பெற்றுக் கொள்ளும் அரசு அலுவலர்கள், பெயர் மாற்றம் என்றால், 10 நாட்கள், பெயர் சேர்ப்பு என்றால் 15 நாட்கள், பெயர் நீக்கம் என்றாலும் அதே 15 நாள்தான். இது பொதுமக்களுக்கு அலுவலர்கள் கொடுக்கும் கால அவகாசம். அந்த கால அவகாசம் முடிந்து வந்து குடும்ப அட்டையை கேட்டால் 2 நாள் கழித்து வாருங்கள் என்று அனுப்பி விடுகின்றனர். இப்படி அலைகழிக்கப்படும் பொதுமக்கள் ஒரு கட்டத்தில் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு போகிறது. இப்படியே போனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியதுதான்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம்முடைய வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறோம்: தூத்துக்குடி மாவட்டம் நாலுமுளைகிணறு என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் சி.ராஜா. வேலை காரணமாக சென்னைக்கு வரும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார். அப்போது கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து இவரது பெயர் நீக்கப்படுகிறது. எப்படியென்றால் சி.ராஜாவுக்கு பதில் சி.ராசு என்று. அப்போது பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையான பெயர் நீக்கம் செய்து சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுள்ளார் ராஜா. ஆனால் அந்த அலுவலரோ, நீங்கள் சென்னையில் உங்களது உண்மையான பெயரை சொல்லி குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு 2008இல் நடந்தது.
இதையடுத்து அந்த பெயர் நீக்கம் செய்யப்பட்ட சீட்டுடன் உணவு பொருள் வழங்கல்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ள ராஜாவுக்கு பெரும் அதிர்ச்சி. உங்கள் பெயர் ராசு என்று உள்ளது. எப்படி ராஜா என்று சேர்க்க முடியும் என்று கூறிவிட்டு, அவரது மனுவை நிராகரித்துள்ளார் அலுவலர். அப்போது, தனது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் காண்பித்துள்ளார் ராஜா. ஆனால் அவருக்கு அங்கு ஏற்பட்டது ஏமாற்றம்தான். தற்போது 2010 ஆண்டு பிறந்து முடியபோகிறது. இதுவரை ராஜா, குடும்ப அட்டை வாங்கவில்லை.
இப்படி பல ராஜாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கவனத்திற்காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அலைகழிக்க விடாமல் இருப்பார்களா என்றால் கேள்விக்குறித்தான். இந்த அரசு மட்டும் அல்ல எந்த அரசு வந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயகத்தில், அவர்கள் மன்னர்களாக அல்ல, சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்!
Source: webdunia
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- சிதம்பரத்தில் 2 வீடுகளில் ரூ 4 லட்சம் நகை, பணம் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
No comments:
Post a Comment