Islamic Widget

October 18, 2010

பிராமண நீதிபதிகள், தலித் மனுதாரர் - குஜராத் நீதிமன்றத்தில் சலசலப்பு!

அகமதாபாத் : தலித் ஒருவர் பணியாளர் நியமனத்தில் தான் தலித் என்ற ஒரே காரணத்துக்காக தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாகவும் பிராமணர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான மாவட்ட நீதிபதி பணியாளர்களை நியமித்து உத்தரவிட்டதாகவும் நியாயம் கோரி தொடர்ந்த வழக்கு, மற்றொரு பிராமண நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



குஜராத் உயர் நீதிமன்றத்தில் அஜித் மக்வானா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், ஜுனாகாத் மாவட்ட நீதிபதி மீது புகார் ஒன்றைப் பதிவு செய்தார். அப்புகாரில், "மாவட்டத்தின் Class - III மற்றும் Class - IV பணியாளர்களை நியமிப்பதில் மாவட்ட நீதிபதி பிராமணர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். பணிகளில் நியமிக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பிராமணர்களாவர். இவ்வாறு தன் உயர் சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களை நியமிப்பதற்காகவே விதிமுறை மீறி இருமுறை நேர்காணல் நடத்தி என்னை அப்பணிகளுக்குத் தகுதி இழக்க செய்தார்" என்று மக்வானா குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர் நீதிநன்றத்தில் நீதிபதி R.R. திருப்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அஜித் மக்வானா சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் A.M. சௌஹான் உடனடியாக எழுந்து, "இவ்வழக்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியின் மீது தொடரப்பட்டுள்ளது. அவர் தன் சமூகத்துக்குச் சார்பாக நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் அதே பிராமண வகுப்பை சார்ந்தவர் என்பதால், இவ்வழக்கில் முறையான நியாயம் கிடைக்கும் என்ற அச்சம் தனக்கு உள்ளதாகவும் எனவே, நீதிபதி திருப்தி இந்த வாழ்க்கை விசாரிப்பதில் தனக்கு ஆட்சேபணை உள்ளதாகவும்" தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி R.R. திருப்தி, "ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறுவது இதுவே முதன் முறை" என்றும், "இது நீதிமன்றத்தின் மீதான அவருடைய தவறான புரிதலை காட்டுவதாகவும்" சினத்துடன் கூறினார்.
தொடர்ந்து சினத்தோடு, "இவ்வாறு கூறியதற்காக வழக்கறிஞர் A.M. சௌஹான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும், ஒருவேளை அவர் தனது கட்சிக்காரரான அஜித் மக்வானாவின் தூண்டுதலின் பேரில் அவ்வாறு பேசியிருந்தால் அவற்றின் மீதும் வழக்கு தொடுக்கவும் முடியும்" என்று கடுமையாகக் கூறிய நீதிபதி, ஒரு வழியாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு,
"நீதிமன்றத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காகவோ அல்லது வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றவோ தான் வழக்கறிஞர் A.M. சௌஹான் இவ்வாறு பேசியுள்ளார். இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க கூடாது என்ற காரணத்திற்காக இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறி வழக்கை மேற்கொண்டு விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment