சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற காவல்துறைத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளிநாட்டுத் தீவிரவாதிகள் ஊடுருவல் மட்டுமல்லாமல் உள்நாட்டிலேயே புதிய உருவில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதாகக் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களை குறிப்பாக,பெண்களைத் தீவிரவாதிகளாக உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உள்நாட்டில் "காவி பயங்கரவாதம்' புதிய அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த காலங்களில் நடந்துள்ள பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காவி பயங்கரவாதம்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளதாகவும் அவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
அமைச்சர் ப.சிதம்பரம், "காவி' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதற்கு முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் அதன் கூட்டணியான சிவசேனைக் கட்சியும் நாடாளுமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. மக்களவையில் பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, சிதம்பரம் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். காவி என்பது அமைதியின் அடையாளம்.இதை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றார்.இதற்காக அமைச்சர் சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்,அப்படி அவர் கேட்காவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பாஜக, சிவசேனை ஆகிய கட்சிகள் கோரிக்கை எழுப்பியுள்ளன.
2007-ம் ஆண்டு மே மாதம், ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் உள்ள மெக்கா மஸ்ஜித்தையும், அதே ஆண்டு ஜூலை மாதம், ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீரில் உள்ள தர்காவையும் குறிவைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2008 செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம், மாலேகானிலும், குஜராத் மாநிலம், மொடாஸவிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கடந்த ஆண்டு கோவாவிலும் குண்டுவெடித்தது. இந்தச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக நடந்துள்ளவையாகக் கருத இடமுண்டு.இதில் இந்து அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம்,மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதச் செயல்கள் தடுப்புப் பிரிவு போலீஸôர் நடத்திய விசாரணையில், இதில் இந்து அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.பெரும்பான்மையினரான இந்துக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கும் இடையே புதிதாக மோதலை உருவாக்கும் நோக்கில் இந்து அமைப்புகள் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
புதிய வகையிலான பயங்கரவாதம் குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருந்துள்ளார்.நாட்டில் ஒரு பக்கம் மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதச் செயல்கள் அச்சுறுத்தலாக உள்ளன. மற்றொரு பக்கம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தூண்டுதலினால் காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் வெவ்வேறு பெயரில் ஊடுருவி வருகின்றனர். இப்போது உள்நாட்டிலேயே காவி பயங்கரவாதம் தலைதூக்கி வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளது கவனத்துக்குரியது. உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருதியே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக நாம் கருதலாம்.
இந்தச் சூழ்நிலையில் தேச நலன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அடிக்கடி பேசி வரும் பாரதிய ஜனதா கட்சி, இதை வேண்டுமென்றே அரசியலாக்காமல் பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு பயங்கரவாதத்தை வேருடன் களைவதில் அரசுக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும்.
இதேபோல மத்திய அரசும் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படாமல், நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக இதை ஏற்றுக்கொண்டு,புதிய உருவிலான பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.
நாட்டில் காவி பயங்கரவாதம் புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளதை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சிலர் மறுக்கக்கூடும். ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் இதைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
காவி பயங்கரவாதத்தால் உள்நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளது உண்மையே. இதுகுறித்து சில அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. பயங்கரவாதம் என்பது இந்துக்களுக்கு மட்டுமோ அல்லது முஸ்லிம்களுக்கு மட்டுமோ அச்சுறுத்தலான விஷயம் இல்லை. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. மதச்சார்பற்ற நாடு. இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாதத்துக்கு இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டியது அவசியம்.
புதிய உருவிலான பயங்கரவாதம் என்பதை காவி பயங்கரவாதம் என அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இதில் "காவி" என்ற சொல்லை அவர் தவிர்த்திருக்கலாம். இது சிலருக்கு மனவேதனை அளிக்கலாம். இந்து அமைப்புகள் தொடர்புடைய பயங்கரவாதம் என்பதைக் கோடிட்டுக் காட்டவே அவர் இதைப் பயன்படுத்தியிருக்கலாம்.
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் தலையெடுத்தாலும் அதைத் தடுக்க வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமை. அதேபோல நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனில் அதை ஒடுக்க மத்திய அரசுடன் கைகோத்துச் செயல்பட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
No comments:
Post a Comment