Islamic Widget

August 10, 2010

பேய் மழை- நிலச்சரிவு: காஷ்மீரில் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு; வீடு இழந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிப்பு


காஷ்மீர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள லே நகரில் கடந்த வியாழக்கிழமை மேகக் கூட்டம் வெடித்து மிகப்பயங்கரமான பேய் மழை பெய்தது. இதனால் மலைக்குன்றுகள் சரிந்து வீடுகள் புதைந்தன. சகதி வெள்ளம் தெருக்களில் கரை புரண்டோடியதால் ஏராளமானவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் பேய் மழை பெய்து பலத்த சேதத்தை உண்டாக்கியது. முதலில் 120 பேர் பலியானது தெரிய வந்தது. சுமார் 500 பேர் காணாமல் போய் விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் நேற்று மாலை வரை பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது.

லே மற்றும் சுற்றுப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது. இதையடுத்து தொற்று நோய் பரவாமல் இருக்க 6 ஹெலிகாப்டர்களில் தடுப்பு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் நடந்து வருகிறது.

சாலைகள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் அழிந்துள்ளதால் மீட்புப் பணிகள் மெல்ல நடந்து வருகின்றன. தொலை தொடர்பும் இல்லாததால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் கதி என்ன ஆனது என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி நீடிக்கிறது.

பலியானவர்களில் இதுவரை 152 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரி வில் சிக்கியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்து தவித்தப்படி உள்ளனர்.

ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதமடைந்து விட்டதால் ஏராளமானவர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் தவித் தப்படி உள்ளனர். இதனால் லே நகர மக்கள் அங்கிருந்து வெளியேறியபடி உள்ளனர்.

லே நகரம் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இன்று தொலை தொடர்பு இணைப்பு கிடைத்துவிடும் என்று தெரியவந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட வர்களை மீட்கும் பணிகள், உதவிகள் செய்யும் பணியும் தீவிரமாகும்.

இதற்கிடையே ஜன்ஸ்கர் பகுதியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 81 பேரை ராணுவ வீரர்கள் மீட்டனர். 11 ஆயிரம் அடி உயரத்தில் குன்றில் 3 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த அவர்களை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் இதுவரை 3200 பேர் லே நகரில் இருந்து மீட்டு ஜம்மு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பயணிகளை லே நகரில் இருந்து மற்ற இடங்களுக்கு அழைத்து செல்லும் பணியில் ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

லே நகர தகவல் தொடர்புக்காக 7 டன் கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவை முழுமையாக செயல்பட்டதும் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment