Islamic Widget

July 25, 2010

கரையேறுமா கடலூர் துறைமுகம்?

பராமரிப்பு இல்லாமல் சிதைந்து காணப்படும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில்நிலையப் பாதை.
கடலூர், ஜூலை 24: 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் இழந்து கிடக்கிறது.
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது கடலூர். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுமுன் கடலூரில் புனித டேவிட் கோட்டையைக் கட்டி, தங்கள் வாணிபத்தைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பரங்கிப்பேட்டை அருகே இருந்த உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் முலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் மணிலா, சர்க்கரை, இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் ஆகியவை கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெங்காயம், வெல்லம், சர்க்கரை, வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. யூரியா, கோதுமை போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ரசாயன மூலப்பொருள்கள், யூரியா உரம் ஆகியவை இறக்குமதி செய்யப் படுகின்றன.
1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது துறைமுக அலுவலகம். கடலூர், நாகைத் துறைமுகங்களுக்கு ஒரே அதிகாரி செயல்படுகிறார். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முகத்துவாரத்தில் படியும் மணலை வாருவதற்கு நிரந்தரமாக செயல்பட்டு வந்த மணல்வாரி இயந்திரம் (டிரட்ஜர்) தற்போது நிரந்தரமாக அகற்றப்பட்டு விட்டது.
சுனாமி மறுவாழ்வுப் பணிகளில், முகத்துவாரத்தில் இருந்து மீன்படிப் படகுகள் நிறுத்தப்படும் உப்பனாறு வரை, சிறிதளவு மணல் அகற்றப்பட்டது. ரூ.15 கோடியில் துறைமுகம் பகுதியில் அலைதாங்கி கற்கள் கொட்டப்பட்டன. எனினும் முகத்துவாரம் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.
ரயில் நிலையத்தில் இருந்து துறைமுகம் செல்லும் ரயில்பாதை கூட அகலப்பாதையாக மாற்றப்படாமல் சிதைந்து கிடக்கிறது.
கடலூர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் 0.5 கடல் மைல் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகின்றன. துறைமுகச் செயல்பாடுகளுக்கு வசதியாக இந்தத் துறைமுகத்துக்கு சுமார் 100 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் நாகை, கொளச்சல் துறைமுகங்களுக்கு போதிய நிலங்கள் இல்லை என்றும் துறைமுக அதிகாரிகள் கூறுகிறார்கள். சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், சென்னை துறைமுகத்தில் இறக்கக் கூடிய சரக்குகளை கடலூரில் இறக்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் கொண்டு போக முடியும்.
இத்தனை வசதிகள் இருந்தும் கடலூர் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படாமலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமலும் செயலிழந்து கிடக்கிறது. கடலூரில் துறைமுகத்தை யொட்டிய பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகள் கட்டுதல், சிறிய வர்த்தகக் கப்பல்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளால் ஆண்டுக்கு ரூ.200 கோடி வர்த்தகம் நடக்கிறது. மீன்பிடித் தொழிலுக்கு வசதியாகக்கூட கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படவில்லை என்பதுதான் கடலூர் மக்களின் ஆதங்கம்.
தென் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான அரசியல் இயக்கங்களும், அதிக எண்ணிக்கையில் அரசியல்வாதிகளும் நிறைந்த மாவட்டமாக கடலூர் திகழ்ந்த போதிலும், பொது நலத்தை எண்ணிப்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமை கிடைக்காததால், துறைமுகம் உள்ளிட்ட சிறந்த திட்டங்களுக்கு முறையாகக் குரல் கொடுக்க நாதியற்றுக் கிடக்கிறது கடலூர்.
இதுகுறித்து கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசனிடம் கேட்டதற்கு, ""கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கடல்சார் வாரியத்திடம் உள்ளது. தமிழக கிழக்குக் கடற்கரையோரம் துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் துறைமுகம் நல்ல வசதி கொண்டது. வசதி குறைந்த நாகை துறைமுகத்தில் ஓரளவு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனால், இயற்கையாக அமைந்துள்ள கடலூர் துறைமுகத்தில் அதுவும் இல்லை. அவ்வப்போது வந்து போகும் கப்பல்களால் தற்போது, ஆண்டுக்கு சுமார் ரூ.4 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்த அரசு திட்டுமிட்டு உள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment