Islamic Widget

August 23, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிரதமர், சிதம்பரம் மீது கைகாட்டுகிறார் கனிமொழி



ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்று முடிவெடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு என்று சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி கூறினார். இந்த வாதத்தை உறுதிப்படுத்துவதற்காக மன்மோகன் சிங், சிதம்பரம், ராஜா ஆகிய மூன்று பேரும் இதுகுறித்து முடிவெடுத்த ஆலோசனைக் கூட்டத்தின் மினிட் புக்கையும் கனிமொழி கோர்ட்டில் தாக்கல் செய்தார். தனக்கு தெரியாமலேயே ராஜா முடிவெடுத்துவிட்டதாக பிரதமர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், கனிமொழி இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.,யின் வாதங்கள் முடிவு பெற்றுவிட்டன. இதையடுத்து, குற்றப் பின்னணியை தொகுப்பதற்குண்டான பணிகளில் சி.பி.ஐ., கோர்ட் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு முன், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களை நீதிபதி சைனி கேட்டு வருகிறார். அதற்கு முதல் ஆளாக, ராஜா தனது வாதத்தை வைத்தார். அதன் பிறகு, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று, கனிமொழியின் வாதம் கேட்கப்பட்டது.

அப்போது, கனிமொழியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கையை, பார்லிமென்டின் இரு அவைகளுமே இன்னும் ஏற்கவில்லை. அந்த அறிக்கையை சாட்சியாக வைத்து தான், கனிமொழியை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. பார்லிமென்டின் இரு அவைகளுமே இன்னும் ஏற்காத அந்த அறிக்கையை, கனிமொழிக்கு எதிரான சாட்சியமாக எப்படி கருத முடியும். கனிமொழியால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டுகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்றும், இதனால் எந்த வகையிலும் நாட்டுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் பிரதமரே கூறியுள்ளார். இதை, பார்லிமென்டிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இழப்பை கனிமொழி ஏற்படுத்திவிட்டார் என்ற வாதமும் வலுவிழந்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்றும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முடிவை அப்போதைய அமைச்சர் ராஜா மட்டுமே தன்னிச்சையாக எடுக்கவில்லை.
ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் ராஜா ஆகிய மூன்று பேரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் மினிட் புக்கில் இதற்கான ஆதாரங்கள் அனைத்துமே உள்ளன. அதை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று பேரும் சேர்ந்து தான் ஏல முறை வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர். எனவே, நாட்டுக்கு, ராஜா தான் பெரிய இழப்பு உண்டாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினால் அது தவறானது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பெருமளவுக்கு லாபம் அடைந்ததாக ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யுனிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததே அரசு தான். பங்குகள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டதே தவிர, ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே விற்பனை செய்யவில்லை என்பதையும் கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கனிமொழி ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரை கைது செய்வதற்கும், அவர் மீது வழக்கு தொடர்வதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இது குறித்து, ராஜ்யசபாவின் தலைவரிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது அனுமதியை பெற வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் நடைமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை. இவ்வாறு சுஷில்குமார் வாதாடினார்.

கனிமொழிக்காக வாதாடும் மூத்த வழக்கறிஞரான இவர் தான் ராஜாவுக்காகவும் வாதாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில் தனக்கு எதுவும் தெரியாது; என்னை கலந்து ஆலோசிக்காமலேயே ராஜா முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பல பேட்டிகளில் கூறினார்.
சிதம்பரமும், ராஜாவும் உடனிருந்து, அவர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தான், ஏல முறை வேண்டாமென முடிவெடுத்ததாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான மினிட் புக்கையும் கனிமொழி தாக்கல் செய்துள்ளதால், புதிய பரபரப்பும் திருப்பமும் ஏற்பட்டுள்ளது.

source: dinamalar

No comments:

Post a Comment