
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஜல் என்ற புயலாக உருமாறி ஞாயிற்றுக்கிழமை இரவில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரி, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த புயலின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் ஆபத்தை சமாளிப்பதற்காக போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, மீன்வளத்துறை ஊழியர்கள் அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வருவாய்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நேற்று இரவு கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடல் அலைகள் கடும் இரைச்சலுடன் ஆக்ரோஷமாக எழுந்தது. இதனால் கடற்கரைச் சாலையில் கடல்நீர் தடுப்பு சுவரைத் தாண்டி ஊருக்குள் புகுந்தது. ரோட்டில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று மாலை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சிவதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடற்கரை சாலையில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சோலைநகர் வடக்கு, தெற்கு பகுதியிலும், வப்பாகீரப்பாளையம் பகுதியிலும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கும் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
Source: inneram
No comments:
Post a Comment