Islamic Widget

October 13, 2010

திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து விலக்கு : முஸ்லிம் லீக் கோரிக்கை

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட தமிழக அரசு கட்டாயத் திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூர் முதுநகரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு சிறுபான்மை வாரியத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி.  


பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புகளை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் சிறுபான்மை சமுதாயத்தின் தனிச்சட்டத்தில் தலையிடுவதாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

காதர் முகைதீன் எம்.பி.யும் அவரைச் சார்ந்தவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெயரை பன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குக் கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜி. முகமது முகைதீன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலர் ஜே. நயினா முகமது வரவேற்றார். மாநிலத் தலைவர் தாவூத் மியாகான், மாநில பொதுச் செயலர் பி. முகமது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் ரபீக், பஷீர்அகமது உள்ளிட்ட பலர் பேசினர்.


Source: dinamani

No comments:

Post a Comment