Islamic Widget

July 30, 2012

வீராணம் ஏரி நீர் மட்டம் குறைவு: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தடைபட்டுள்ளது.

சென்னைக்கு தண்ணீர் தடையின்றி செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ அரசர்களால் உருவாக்கப்பட்ட இந்த பெரிய ஏரி, இப்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெற்று வருகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வீராணம் ஏரி தண்ணீர் வசதி பெறுகிறது. சென்னை மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெரிய சிமெண்ட் பைப்புகள் புதைக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் இப்பணி பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகரில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஆண்டுக்கு ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் 2001-ம் ஆண்டு அதிமுக அரசு பதவி ஏற்றதும் முதல்வர் ஜெயலலிதா புதிய வீராணம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சுமார் ரூ.720 கோடி செலவில் இரும்பு குழாய்கள் புதைக்கப்பட்டு வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்லப்பட்டது.

மேலும் வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்ல சேத்தியாதோப்பு முதல் பண்ருட்டி வரையில் சுமார் 43 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் எடுத்து அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும், போதுமான மழை இல்லாததாலும், வறட்சி ஏற்பட்டுள்ளதாலும் நீர் வரத்து குறைந்து வீராணம் ஏரி வறண்டு வருகிறது.

வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் தினமும் சென்னைக்கு அனுப்பப்பட்ட நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே ஏரியில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து வறண்டு காணப்படுவதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தற்போது குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேத்தியாதோப்பு முதல் பண்ருட்டி வரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீர்மூழ்கி மோட்டார்களை பழுது நீக்கியும், ஆழ்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment