Islamic Widget

February 15, 2012

பாதுகாக்கத் தவறிய..பக்கீம்ஜாத் குளம்

நமதூருக்கென்று வரலாற்று பாரம்பரியங்கள் நிறைய இருப்பினும் அவற்றில் பலவற்றை நாம் பாதுகாக்க தவறி விடுகிறோம். பிற்காலங்களில் தவறவிட்ட அடையாளங்களுக்காக ஏங்குகிறோம்.
பரங்கிப்பேட்டை சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்பது உண்மை. புதிய வளர்ச்சி காணும் அதே வேளையில் பழைய பயன்பாடுகளையும் நாம் பாதுகாத்தாக வேண்டும். குறிப்பாக பரங்கிப்பேட்டையின் நீர் நிலைகள். குளங்கள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்ற இயற்கைக்கு இறைவனளித்துள்ள பெரிய அருட்கொடைகளை நாம் பாதுகாக்கத் தவறினால் அதன் தீய விளைவுகளை நம் சந்ததிகளுக்கு நாம் கொடுத்து சென்றவர்களாக தூற்றப்படுவோம்.
பள்ளிவாசல்களை உருவாக்கிய முஸ்லிம்களாகட்டும். கோயில்களை கட்டிய பிறராகட்டும் இவர்கள் அனைவருமே ஆரம்பகாலத்தில் நீர் நிலைகளின்றி இணைத்தே உருவாக்கினார்கள். தண்ணீர் உயிர்வாழ்வின் முக்கிய ஆதாரம் என்றுணர்ந்தவர்கள் அதை ஆன்மீக அடையாளங்களுடன் பாதுகாத்தார்கள். அவை கிணறுகளாகவோ, குளங்களாகவோ, குட்டைகளாகவோ காட்சியளிக்கும்.
நமதூரைப் பொருத்தவரை புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிகளைத் தவிர்த்து பழைய பள்ளிவாசல்கள் அனைத்துமே குளங்களை தனது சொத்தாக்கிக் கொண்டுள்ளன. ஆனால் இன்றைக்கு பரங்கிப்பேட்டையில் எத்துனைக் குளங்கள் நிர்வாத்தினரால் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன? என்று ஒரு கேள்வியை வைத்தால் கிடைக்கும் விடை என்னவோ “ஒன்றுக் கூட இல்லை” என்பதுதான்.
ஊரின் பள்ளிவாசல்களை சுற்றியுள்ள குளங்களில் அறவே பராமரிப்பின்றி வேகமாக அழிந்து வரும் குளம் பக்கீர்மாலிமார் (பக்கீம்ஜாத்) பள்ளிவாசலை சார்ந்துள்ள குளமாகும்.
சுமார் ஓராண்டுக்கு முன் இக்குளம் பற்றி ஊர் குழுமத்தில் பதிவு வைக்கப்பட்டது. அந்தப் புகைப்படத்தை இணைக்கிறோம். இன்றைய அவலமான புகைப்படமும் தொடர்ந்து வருகின்றது.


ஓராண்டுக்கு முன் குளத்தின் கரையோரத்தில் பசுமையை காண முடிகின்றது. இன்றைக்கு அந்த பசுமைகள் அழிந்து பிளாஸ்டிக், பாலிதின் பைகள் குளத்தை வேகமாக அழித்து வருகின்றன.


இந்தக் குளத்தின் அழிவிற்கு காரணம் அந்தப்பகுதியில் உள்ள கடைகள் என்றால் அது மிகையாகாது. பாலிதின் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் மற்றும் டம்லர்கள், பொருப்பில்லாமல் அலட்சியமாக அதில் எரியப்படும் குப்பைகள் என்று அழுத்தமாக சொல்ல முடியும்.


பள்ளி நிர்வாகிகளின் கவனத்தை இந்த அவலம் ஈர்க்கவே இல்லையா….?
தனி நபர் நலனை விட ஊர் நலன், சந்ததிகளின் நலன் காப்பது முக்கியம். ஒரு புறம் கடல் நீர் உட்பட நிலத்தடி நீர்களை உறுஞ்சி பரங்கிப்பேட்டையை காய்ந்த வரண்ட – சபிக்கப்பட்ட பூமியாக ஆக்க கப்பல் கட்டும் தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகள் எழுந்து தயாராகி வரும் வேளையில் அவற்றில் சில உறுஞ்சி தன் பணியைத் துவங்கி விட்ட நிலையில் நம்மை சுற்றியுள்ள கிணறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளையும் நாம் பாழ்படுத்தி அழித்தால், இதற்கு நாம் அறிந்தோ, அறியாமலோ துணைப் போனால் படித்தவர்கள், சிந்திக்கத் தெரிந்தவர்கள், உலகை அறிந்தவர்கள் என்று நம்மைச் சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படவேண்டிய காலம் அருகில் வந்து விடும்.
பிளாஸ்டிக் பையை ஏன் தவிர்க்க வேண்டும் ?

ஏழு காரணங்கள் :

1 . அழியும் இயற்க்கை வளம்:
பிளாஸ்டிக் என்பது பாலி எத்திலீன் .இது இயற்கை வாயு மற்றும் பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்க படுவது . அமெரிக்கர்கள் ஒரு வருடத்துக்கு உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளை செய்ய 1 .2 கோடி பேரல் எண்ணெய் தேவைபடுகிறது .அப்படியென்றால் உலகம் முழுக்க ????
2 .சுற்றுபுறம் மாசடைதல் :
ஒரு பிளாஸ்டிக் பை நிலத்தில் அழிய ஆயிரம் வருடமும் நீரில் அழிய 450 வருடமும் தேவைபடுகிறது . அவ்வளவு வருடமும் அது என்ன செய்கிறது …. நிலத்தை அடைத்து கொண்டு ….????
3 . ஒரு சதவிதத்துக்கும் குறைவான அளவே மறு சுழற்சி செய்யபடுகிறது :
ஆண்டொன்றிற்கு ஒரு மனிதன் 350 -400 பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துகிறான் . இவையெல்லாம் எங்கே செல்கின்றன என்று யோசித்தீர்களா ?
4 .உயிரினங்களுக்கு ஆபத்து :
மிருகங்களும் கடல் வாழ் உயிரினங்களும் தெரியாமல் பிளாஸ்டிக் பையை உண்டு இறந்து இருக்கின்றன ! கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளை jelly fish என்று நினைத்து உண்டு இறக்கின்றன .உயிரினங்களின் செரிமான குழாயில் இருந்து கொண்டு செரிமானமாகமாகாததால் அவை இறக்கின்றன !
5 .குழந்தைகள் பாதுகாப்பு :
US consumer product safety commision ஆண்டொன்றுக்கு 25 குழந்தைகள் பிளாஸ்டிக்கை முகர்ந்து மூச்சு விட முடியாமல் இறப்பதாக தெரிவிக்கின்றது ! இதில் பெரும்பான்மை 12 மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் !
6 .நம் உணவில் கலக்கும் பிளாஸ்டிக் :
பத்து லட்சம் டன் = ஒரு வருடத்தில் தயாராகி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளின் அளவு !
ஆடு ,மாடு , கோழி ,மீன் ஆகிய உயிரினங்கள் எதிர்பாராவிதமாக ப்ளாஸ்டிக்கை உண்பதால் மரணிக்கும் வாயிப்பு ஏற்படும் போது அவற்றை உண்ணும் மனிதனின் உடலிலும் பிளாஸ்டிக் சேர்கிறது .
7 . வெறும் பன்னிரண்டு நிமிடம் :
ஒரு பிளாஸ்டிக் பை அது தூக்கி எறியப்படும் முன்பு சராசரியாக வெறும் பன்னிரண்டு நிமிடமே உபயோகபடுத்த படுகிறது .அதன் பின் ????? வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த பூமியில் மிதந்து ,பறந்து நீர்நிலைகளை அடைத்து வெள்ளபெருக்கை உண்டாக்கி அதன் சேவையை செவ்வனே செய்கிறது
இவையெல்லாம் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமான புள்ளிவிபரம்.

குளத்தில் கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, குளத்தை சுத்தப்படுத்தி தெரு புறத்தில் பாதுகாப்பிற்கு வேலியோ, சுவரோ எடுக்கும் பொறுப்பு பள்ளி நிர்வாகத்திற்கு உண்டு.
நீர் நிலைகளைப் பாதுகாக்கும் கடமை பேரூராட்சிக்கும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கும், சமூக ஆர்வளர்களுக்கும் உண்டு. பெரியத் தெரு முனையில் கூடும் இளைஞர்கள் நினைத்தால், அவர்களை இந்த குளத்தின் சுத்தப்படுத்தும் பணிக்கு அழைத்தால் சுத்தப்படுத்தும் வேலை சுலபமாக முடிய வாய்ப்புள்ளது.
ஊதும் சங்கை ஊதி வைப்போம். எத்துனை காதுகளில் ஒலிக்கின்றது என்று பார்ப்போம்.

நன்றி:pnotimes

No comments:

Post a Comment