Islamic Widget

December 13, 2011

வக்ஃபு வாரியத்திற்கு ஜெயலலிதா ரூ.3 கோடி நிதி-ஹஜ் கமிட்டிக்கு ரூ.20 லட்சம்


சென்னை: வ்க்ஃபு வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க அதற்கு ஒட்டு மொத்தமாக ரூ.3 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதிலும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பள்ளிவாசல் மற்றும் தர்காக்களில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 60 வயது நிரம்பிய பேஷ் இமாம்கள், மோதினார்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் முஜாவர்கள் ஆகியோரிடமிருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக வரப்பெற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, உலமா ஓய்வூதியப் பயனாளிகளின் எண்ணிக்கையை 2,400-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையையும் 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3.12 கோடி செலவாகும்.

இதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பெருமக்களின் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் வக்ஃப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, வாரியத்தின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வண்ணம், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தவும், வக்ஃப் வாரியத்தில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை அறிந்து, அவர்களுடைய ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கும் வகையில், வக்ஃப் வாரியத்திற்கு சிறப்பு ஒட்டு மொத்தத் தொகையாக ரூ. 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, வருடந்தோறும் ஹஜ் புனித யாத்திரைக்காக செல்லும் பயணிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான வசதிகளை செய்து தரும் பணியினை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் அன்றாட நிர்வாக செலவு அதிகரித்துள்ளதையும், தமிழ் நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதையும் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்த ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment