பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அல்கொய்தா மற்றும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை அழிக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அங்குள்ள தத்தாஹெல் கிராமத்தில் உள்ள வீடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று அந்த வீடுகளின் மீது அமெரிக்க ராணுவம் விமானி இன்றி ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
முதலில் 2 ஏவுகணைகளும், அடுத்து 4 ஏவுகணைகளும் வீசப்பட்டது. இதில் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. வாகனங்கள் தீயில் எரிந்தன.
இச்சம்பவத்தில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் (செப்டம்பர்) மட்டும் இப்பகுதியில் 25 தடவை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 150 பேர் பலியாகி உள்ளனர். இதில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் அடங்குவர். சமீபத்தில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளுக்கு உணவு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் பாகிஸ்தான் வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டது.
இருந்தும் மீண்டும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இம்மாதத்தில் (அக்டோபர்) ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் முதல் ஏவுகணை தாக்குதல் இதுவாகும்.
No comments:
Post a Comment