Islamic Widget

April 03, 2012

பரங்கிப்பேட்டையில் கம்பெனிகளுக்கு வீடு, தொடரும் அவலம்!


பரங்கிப்பேட்டை: சாமியார் பேட்டை தொடங்கி கிள்ளை முடசல்ஓடை வரையுள்ள கடற்கறைப் பகுதிகள் கையகப்படுத்தப்பட்டு வளர்ந்து வரும் பல்வேறு கம்பெனிகள் இப்பகுதி மக்களின் நிம்மதியை கடந்த பல ஆண்டுகளாக இழக்க செய்து விட்டதை யாரும் மறுக்க முடியாது. குறைந்த விலையில் விவசாய நிலங்களை இழந்த பகுதி விவசாயிகள், வாழ்வாதாரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இவர்களின் அபயக்குரல்கள் ஒலித்தாலும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

வளர்ந்து வரும் கம்பெனிகளுக்கு வேலை ஆட்கள் வெளிமாநிலங்களிலிருந்து இறக்கப்படுகிறார்கள். மிக குறைந்த சம்பளத்தில் இறக்கப்படும் குஜராத், ஒரிசா, ராஜஸ்தான் மற்றும் நேபாள தொழிலாளர்கள் கடலூர் O.T யிலிருந்து பரங்கிப்பேட்டை உட்பட பல பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
பெரும் மக்கள் தொகையைக் கொண்ட பரங்கிப்பேட்டையில் 50 விழுக்காடு ஊர் வாசிகள் சொந்த வீடு இல்லாமல் வாடகை, அடைமான வீட்டில் வாழ்ந்து வரும் வேளையில் கடந்த சில வருடங்களாக வீட்டு வாடகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இப்போது பேரிடியாக வந்திறங்கியது கம்பெனிக்காரர்களுக்கு அதிக வாடகைக்கு வீடு கொடுக்கும் முறை.
ஏற்கனவே உள்ளுர்வாசிகளுக்கே வீடு பற்றாக்குறை என்ற நிலை நீடித்து வருகின்றது. அதுவே வாடகை உயர்விற்கு காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் கம்பெனிக்காரர்களின் பணத்திற்கு பல்லிலிக்கத்துவங்கிய வீட்டு முதலாளிகள் தங்கள் வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அந்த வீடுகளை கம்பெனிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள். இது பல்வேறு பிரச்சனைகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகின்றது.
வெளி மாநிலத்தவரின் வாழ்க்கை முறை – கலாச்சாரங்கள் இந்தப் பகுதியோடு ஒத்துப் போகாத நிலை. அடையாளப்படுத்த முடியாத போது யார் கம்பெனிக்காரர்கள் யார் வேறு நோக்கத்திற்காக வந்தவர்கள் என்று அறிய முடியாத சூழலில் திருட்டுப் போன்ற குற்றங்களை தடுக்க வழி தெரியாத போக்கு. அந்நிய முகங்களை கண்டதால் சற்று அச்சத்தோடு வாழும் பெண்கள். குடி, குறைந்த ஆடை என்று அவர்களின் வாழ்க்கை முறையைக் கண்டு எரிச்சலடையும் இளைஞர்கள், இப்படி இன்னும் பல.
வீடின்றி இருக்கும் உள்ளுர்வாசிகள் எங்கே போவார்கள்? அகதிகளாக ஊரை விட்ட வெளியேறும் நிலை உருவாகின்றதே.. இது நியாயமா..? என்று ஆதங்க குரல்கள் எழும்பினாலும் வீட்டு முதலாளிகளுக்கு இது பற்றியெல்லாம் எந்த அக்கறையுமிருப்பதாகத் தெரியவில்லை. இது ஒரு சமூக அவலம், சமூக பிரச்சனை என்பதால் மொத்த ஊர்வாசிகளின் கவனமும் இதன் பக்கம் திரும்பியுள்ளது. இது குறித்து ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர்கள் ஊரின் பொது ஜமாஅத்தான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தை நாடியுள்ளார்கள். பொதுமக்கள் கையொப்பமிட்டு மூன்று ஏரியாக்களிலிருந்து மனுக்கள் ஜமாஅத்திற்கு வந்துள்ளன. அ.இ.அ.திமுக பிரமுகர் மலைமோகன் மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தில் கொடுத்து “விரைவில் முடிவெடுங்கள் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக நிற்கிறோம்” என்று கூறி சென்றது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிளுர்நபி பள்ளி அருகில் 4 வீடுகளில் குடி வைக்கப்பட்ட வெளிமாநிலத்தவர்களில் ஒருவர் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை எட்டிப் பார்த்ததாக எழுந்த பிரச்சனையில் அந்தப் பகுதி, இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டது. செய்தி அறிந்ததும் ஜமாஅத் நிர்வாகிகள் காவல்துறையைத் தொடர்புக் கொண்டு விபரம் கூறி, சம்பவ இடத்திற்கு சென்றனர். கொதித்துப் போயிருந்த இளைஞர்களை சமாதானப்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை காவல் துறையில் ஒப்படைத்தனர்.


ஜமாஅத் தலைவரை சூழ்ந்த இளைஞர்கள் “இதற்கு ஒரு முடிவெடுத்தாக வேண்டும்” என்பதை வலியுறுத்தினர்.


இதற்கிடையில் ஜமாஅத் நிர்வாகிகளில் ஒருவரும் கம்பெனிக்காரர்களுக்கு வீடு கொடுத்துள்ளாரே… என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து விபரமறிய ஜமாஅத் செயலாளர்களில் ஒருவரான முஸ்தபாவை தொடர்புக் கொண்டோம்
நான் கம்பெனிக்காரர்களுக்கு வீடு கொடுத்திருப்பது உண்மைதான். இந்தப் பிரச்சனைகளுக்கு முன்னால் அது நடந்தது. இப்போது ஊர், மற்றும் ஜமாஅத்தின் முடிவு எதுவோ அதுக்கு கட்டுப்படுவேன்’ என்று கூறினார்
பரங்கிப்பேட்டைக்குள்ளே சுமார் 40 வீடுகளுக்கு மேல் கம்பெனிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. (பல வீடுகளில் புகைப்படம் நம்மிடம் உள்ளது தேவைப்படும் போது வெளியிடுவோம்)
இந்தப் பிரச்சனை இன்னும் வலுவடையுமுன் ஜமாஅத்தார், வீட்டு உரிமையாளர்கள், நடுநிலையாளர்கள், சட்டத்துறையினர் கலந்துப் பேசி ஒரு முடிவெடுப்பது நல்லது. மக்களும் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment