Islamic Widget

October 07, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படப்போவது உறுதி



கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ள அச்சத்தை போக்க, ஒரு குழுவை அமைக்க முன்வர வேண்டும் என, பிரதமரிடம், தமிழக அரசு மனு அளித்தது. இந்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங், நிபுணர்கள், போராட்டக்குழு உறுப்பினர்கள், அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, அதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, உறுதியளித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படப் போவது உறுதி என்றும் திட்டவட்டமாக கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தனர்.
இந்த குழுவுடன் சேர்ந்து, உதயகுமாரன் தலைமையிலான 13 பேர் அடங்கிய போராட்டக்குழு உறுப்பினர்களும், பிரதமரை சந்தித்தனர். மதியம் 12 மணியளவில், பிரதமரின் இல்லத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. ஒருமணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்திய அணுசக்தி ஆராய்ச்சி கமிஷனின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் அணுசக்தி துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.


சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில், நாட்டிற்கு அணுமின்சக்தி மிகவும் அவசியம். கூடங்குளத்தில் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 950 மெகாவாட் வரையிலான மின்சாரம், தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த மின்சாரம், தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருந்தாலும், சில சந்தேகங்கள் அடிப்படையில், இந்த அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் அச்சத்தை தவிர்க்க வேண்டியது அரசின் கடமை. இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் அணுசக்தி துறை நிபுணர்கள், அரசு தரப்பு பிரதிநிதிகள் ஆகியோரோடு, போராட்டக்குழு உறுப்பினர்களும் அங்கம் வகிப்பர். பொதுமக்களின் குறைகள், அச்சங்கள் முழுமையாக கேட்கப்பட்டு, அது குறித்து ஆராய்ந்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய யோசனைகள் மூலம் அவை தீர்க்கப்படும். அதுவரை, கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்படும். பராமரிப்பு பணிகளை நிறுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், " கூடங்குளத்தில் கட்டுமானப்பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என பிரதமர் கூறுகிறார். கட்டுமான பணிகள் எல்லாமே முடிந்து விட்டன. இனி நிறுத்தி வைக்க ஒன்றுமில்லை. இது தெரியாமல், கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என, பிரதமர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது' என்றனர்.


பிரதமரைச் சந்தித்த பின், போராட்டக்குழு தலைவரான உதயகுமாரன் கூறியதாவது:
பேச்சுவார்த்தை குறித்தும், பிரதமர் மற்றும் அணுசக்தி துறை அதிகாரிகள் சொல்லும் கருத்துக்களில் உடன்பாடு இல்லை. இந்த மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை. மாறாக, மூன்று மற்றும் நான்காம் கட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. இவையே போதுமானவை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.தற்போது, குழு அமைக்கப்படும் என, பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி மற்றும் குழு அமைக்கப்படுவதன் மூலம் எந்த வகையில் திருப்தியடைவது என்று தெரியவில்லை. அந்தக் குழு எப்படிப்பட்டதாக இருக்கும், அதன் விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத நிலையில், அதுபற்றி ஒரு முடிவுக்கு நாங்கள் வரவில்லை.இவ்வாறு உதயகுமாரன் கூறினார்.


பிரதமர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், இன்றோ அல்லது நாளையே குழு அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு:
பிரதமரை சந்தித்த அனைத்துக் கட்சி குழுவிற்கு தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்க, எம்.பி.,க்கள் தம்பிதுரை, மைத்ரேயன், ராஜா, பா.ஜ.,வைச் சேர்ந்த சரவணபெருமாள், எம்.எல்.ஏ.,க்கள் மைக்கேல் ராயப்பன், சரத்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.பிரதமரைச் சந்தித்தபோது, இந்தக் குழுவினர் சார்பில், ஏழு பக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் கையெழுத்திட்டிருந்த அந்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தற்போது வரையிலான பல்வேறு விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன. கடந்த செப்டம்பர் 22ம் தேதி, தமிழக அமைச்சரவை கூடி ஒரு முடிவு எடுத்தது. அதில், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்குள் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என, தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் பயம் நீங்கும்வரை எந்த பணிகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் மனுவில் கூறப்பட்டிருந்தது.இறுதியாக, "கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதி பொதுமக்களுக்கு நிறைய அச்சங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அச்சங்களை போக்கும் வகையில், மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து ஆராய வேண்டும். பொதுமக்களின் சந்தேகங்களும், அச்சங்களும் தீர்த்து வைக்கப்பட வேண்டும்' என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை, மத்திய அரசு அப்படியே ஏற்றுக் கொண்டது.

No comments:

Post a Comment