புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் தான் மேற்கொள்ள இருக்கும் யாத்திரை குறித்து பாஜ தலைவர் எல்.கே.அத்வானி இன்று நாக்பூரில் ஆலோசனை நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய யாத்திரை நடத்தப்போவதாக பாஜ தலைவர் அத்வானி அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த யாத்திரைக்கு பாஜ உயர் மட்டக்குழு அனுமதி அளித்தது. குஜராத் மாநிலத்தில் வல்லபாய் சர்தார் படேல் பிறந்த இடமான கரம்சாத்திலிருந்து அடுத்த மாதம் 11ம் தேதி யாத்திரை புறப்படும் என தகவல்கள் வெளியாயின.
தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த இடத்திலிருந்து அவர் பிறந்த தேதியில் யாத்திரையை தொடங்க அத்வானி திட்டமிட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அக்டோபர் 1ம் தேதி புதுடெல்லியில் பாஜ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்ட முடிவில் அத்வானி யாத்திரை பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படும்.
இதற்கிடையில் யாத்திரையின் நோக்கம், யாத்திரை செல்லும் இடங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக அத்வானி இன்று நாக்பூர் சென்றார். பாஜவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் தனது பங்கு குறித்து பகவத்துடன் ஆலோசனை நடத்துகிறார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜ தலைவர் நிதின் கட்காரியை சந்தித்து நலம் விசாரிக்கவும் அத்வானி திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment