“காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ” என்ற கட்டுரை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பத்திரிகையான “சிம் செய்தி மடலில்” வெளியாகி இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவை காட்டூர் காவல்துறையினர் 1999 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில், சென்னை மொய்தீன்; சமிமுல் இஸ்லாம், போத்தனூர் செய்யது அப்துர் ரகுமான் உமரி, சென்னை செய்யது முகமது, தூத்துக்குடி காதர் பாபா; கோவை ஷாஜஹான்,; அபுதாகீர், ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மொய்தீன் இறந்து விட்டதால், மற்ற ஆறு பேர் மீதும், கோவை இரண்டாவது விரைவு கோர்ட்டில் வழக்கு நடந்தது.
இவ்வழக்கில் கடந்த 2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆறு பேருக்கும், தலா மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து, ஆறு பேரும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை, கோவை விரைவு கோர்ட்டிலேயே, மறு விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சமிமுல் இஸ்லாம், செய்யது அப்துர் ரகுமான் உமரி, செய்யது முகமது, காதர் பாபா, ஷாஜஹான் ஆகிய ஐந்து பேருக்கு, தலா இரண்டு பிரிவுகளில், தலா மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தும், அபுதாகீர் என்பவரை விடுவித்தும், நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரும், ஏற்கனவே மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டனர். கூடுதலாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால், அவர்கள் நேற்றே விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment