Islamic Widget

March 27, 2011

முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது: 'ஜெ'வுக்குக் கருணாநிதி பதில்

"அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும்" என ஜெயலலிதா பேசியதற்குத் திமுக தலைவர் கருணாநிதி "யாரை ஏமாற்றினாலும், இஸ்லாமிய மக்களை ஜெயலலிதாவினால் ஏமாற்ற முடியாது" என்று பதிலளித்திருக்கிறார்.

நேற்று கேள்வி பதில் வடிவத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என பேசிய ஜெயலலிதா, இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே இருந்த போது ஏன் அதைச் செய்யவில்லை?" என்று அவர் வினா எழுப்பினார்.

"இப்போது, தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், 'இஸ்லாமிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவீதம் அளித்தது தி.மு.க. ஆட்சியில்தான். இந்த ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்' எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஆந்திரத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு ஐந்து சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ளது போன்று இங்கும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த ஜெயலலிதா, அதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்றார். அதேபோல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்று என்றும் அவர் மற்றொரு முறை தெரிவித்திருந்தார். இப்படியெல்லாம் பேசியதை மறைத்துவிட்டு, இப்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே ஜெயலலிதா பேசினால் அதை மக்கள் நம்புவார்களா" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment