இனி சிங்கள மொழியில் மட்டுமே இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சன்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் மற்றும் பிற வடக்கு பகுதிகள், கண்டி, கொழும்பு உட்பட்ட தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டு வந்தது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேறு எந்த நாட்டிலும் தேசிய கீதம் ஒரு மொழிக்கு அதிகமான மொழிகளில் பாடப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்கா தமது ஆட்சிக்காலத்தின் போது வடக்கில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டபோது அந்நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ண ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியின் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சுமார் 300 மொழிகளைப் பேசும் இந்தியாவின் தேசிய கீதம் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதை விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source:.inneram
No comments:
Post a Comment