Islamic Widget

July 22, 2010

தலிபான்களை ஒழித்துக்கட்டுவோம்: அதிபர் ஒபாமா


வாஷிங்டன், ஜூலை 21: ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள தலிபான்களை அமெரிக்கா அடியோடு ஒழித்துக்கட்டும் என்றார் அதிபர் ஒபாமா.
பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். டேவிட் கேமரூனும், பராக் ஒபாமாவும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு விஷங்கள் குறித்து ஆலோசித்தனர். இவர்களது ஆலோசனையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவது பிரதான இடம்பிடித்தது.
இதையடுத்து இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்த போது, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களை அமெரிக்கா அடியோடு ஒழித்துக்கட்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஒபாமா.
மேலும் அவர் கூறியது: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியிலும் பயிற்சி பெறும் தலிபான்கள்தான் அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த அப்பாவி மக்களை கொல்கின்றனர். இவர்களின் இந்தப் போக்கை அனுமதிக்கமாட்டோம். இவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கை தெளிவாகவுள்ளது. இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளமாட்டோம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடுவதென்பது எளிமையானதல்ல. எனினும் அவர்களுக்கு எதிராகப் போராடுவதென்பது அவசியமான ஒன்று. இதில் நிச்சயம் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைக்கும்.
அல்-காய்தா உள்பட பிற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானை பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். இதனால் பிற பகுதிகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவுகின்றனர். இந்த ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையும் இப்படியே அமெரிக்கா அனுமதிக்காது. முடிவுக்கு கொண்டுவரும்.
ஆப்கானிஸ்தானில் மெல்ல மெல்ல படையை வாபஸ் பெற அமெரிக்கா முடிவெடுத்திருந்தாலும், அங்கு பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் படைகளே அவர்களது நாட்டு முழுப் பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையை அமெரிக்கா உருவாக்கும்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஒருபுறம் எடுத்துவரும்நிலையில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அமெரிக்கா அக்கறைகாட்டி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் பாராட்டுக்குரியது என்றார் ஒபாமா.

No comments:

Post a Comment