Islamic Widget

February 24, 2012

பயோமெட்ரிக்' கார்டுகள் திட்டம்: ஆகஸ்ட்டில் துவக்க அரசு ஏற்பாடு


தமிழகம் முழுவதும், ரேஷன் கார்டுகள் கொண்டு பொருள் வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு, பயோமெட்ரிக் கார்டுகள் திட்டம், அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் முதல் பயோமெட்ரிக் கார்டுக்கான பணிகளை அரசு துவக்க உள்ளது.

தமிழகத்தில், 2.25 கோடி ரேஷன் கார்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ளன. ரேஷன் கார்டு, அடையாள அட்டையாகவும் பயன்படுவதால், பெரும்பாலானோர், ரேஷன் கார்டுகளை பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக அரசின் இலவசத் திட்டங்களை பெற, ரேஷன் கார்டு அவசியம் என்பதும், மக்கள் ஆர்வத்துக்கு முக்கிய காரணம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. அதன்பின், 2010ம் ஆண்டு புதிய கார்டுகள் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அப்போதிருந்த தி.மு.க., அரசு ஒரு ஆண்டு காலநீட்டிப்பு செய்தது. அதை தொடர்ந்து, 2011ல் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. புதியதாக பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அரசு, மேலும் ஓராண்டுக்கு கால நீட்டிப்பு செய்ததுடன், கார்டுகளில் உள்ள இணைப்புத்தாளில் பதிவு செய்து கொள்ளுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வரும் 28ம் தேதியுடன் பதிவு செய்வது முடிவடைகிறது.
புதிய ரேஷன் கார்டு கேட்டு, நாள்தோறும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். புதிய ரேஷன் கார்டு வழங்கும்பட்சத்தில், ஆகஸ்ட்டில் பயோமெட்ரிக் கார்டுக்கான பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்படும். அதனால், விண்ணப்பங்களை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பயோமெட்ரிக் கார்டாக அவர்களுக்கு வழங்கிவிடலாம் என்பது, அரசின் திட்டமாக உள்ளது. ஆனால், புதிய ரேஷன் கார்டுகள் தங்களுக்கு வேண்டும் என, அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டு வருகின்றனர். சட்டசபையில், தமிழக முதல்வர், 2013ம் ஆண்டு முதல், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கார்டுகளை கொண்டு, பொருட்களை பெறும் வகையிலான திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அதன் முன்னோட்டமாகவே, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் முதல் பயோமெட்ரிக் கார்டுகள் தயாரிக்கும் பணியை, எல்காட் மூலம் அரசு மேற்கொள்ள உள்ளது. அதனால், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளித்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆறு மாதத்தில், பயோமெட்ரிக் கார்டுகள் தயாரிக்கப்பட உள்ளதால், அப்போது ரேஷன் கார்டுகளுக்கு பதில், பயோமெட்ரிக் கார்டுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி விடலாம். இப்போது ரேஷன் கார்டு கொடுத்தால், ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு முறை கார்டு வழங்க வேண்டியதிருக்கும். அதனால், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பத்தை ஆய்வு செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment