Islamic Widget

February 24, 2012

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மண்டல அரசு தேர்வுகள் துறை துணை இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனித்தேர்வர்கள்
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கிறவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி 121/2 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
வயது குறித்த பிறப்பு சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்த பட்ச கல்வித்தகுதி ஏதும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ம் வகுப்புக்கும் கீழ் படித்து இடையில் நின்ற 121/2 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்துறையால் நடத்தப்பட்ட 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் தவிர்த்து ஏனைய பாடங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் வைத்திருப்போர் இத்தேர்வுக்கு ஆங்கிலம் மட்டுமே பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 2009 வரையில் இத்துறையால் நடத்தப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருப்பின், தேர்ச்சி பெறாமையை தெரிவித்து, இத்துறையினால் அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பாணை அல்லது மதிப்பெண் சான்றிதழின் அச்சு பகர்ப்பு நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அப்பாடங்களை மட்டும் பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்கலாம்.
பாடத்திட்டங்கள்
டிசம்பர் 2010-ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி சான்றிதழ் பெறாதவர்கள் விண்ணப்பிக்கும் பாடங்கள் அனைத்துக்கும் மீண்டும் பழைய பாடத்திட்டத்தில் எழுத விண்ணப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் அனைத்து பாடங்களுக்கும் முதன்முறையாக வருகை புரிபவர்களுக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் நடத்தப்படும் 2011-12-ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடநூல்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் வழங்கப்படும்.
தேர்வு கட்டணம்
டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி ஒரு சில பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்கள் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நடத்தப்பட உள்ள இரு பருவத்
தேர்வுகளுக்காக மட்டும் பழைய பாடத்திட்டத்தின்
படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேற்காண் இருபருவங்களிலும் தேர்ச்சி பெறாதவர்கள் 2014 முதல் புதிய பாடத்திட்டத்தின் படி அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும்.
தேர்வுக்கட்டணம் ரூ.100, பதிவுக்கட்டணம் ரூ.10, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.10, பணிக்கட்டணம் ரூ.5 ஆக மொத்தம் 125 ரூபாய் ஆகும். தேர்வுக்கட்டணத்தை வங்கியில் பெற்ற கேட்பு வரைவோலை(டிமாண்ட் டிராப்ட்) மூலமாக செலுத்தக்கூடாது, கருவூலம் வாயிலாக மட்டுமே அருகில் உள்ள அரசு கருவூலங்களில் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள செலுத்துச்சீட்டு மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கடைசி தேதி
வெற்று விண்ணப்பத்துடன் கூடுதலாக வழங்கப்படும் குறியீட்டு சீட்டு படிவத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தில் சான்றொப்பம் பெறக்கூடாது. இப்படிவத்தில் உள்ள புகைப்படமே மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குறியீட்டு சீட்டுபடிவத்தினை இணைத்திட ஜெம்ப் கிளிப் மட்டுமே பயன்படுத்த வேண்டும், குண்டூசி பயன்படுத்தக்கூடாது.
வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி வரை வெற்று விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி அன்று மாலை 5-45 மணிக்குள் கடலூர் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். சிறப்பு அனுமதி திட்டம் வழங்கப்படாது என்பதால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment