பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, கோமதி சக்தி ஸ்வரூப் பொறுப்பேற்றார்.
மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப், தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் பாகுபாடுடன் நடந்து கொள்வதாகக் கூறி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவாளர், மாவட்ட நீதிபதி உள்ளிட்டவர்களிடம் புகார் செய்தனர்.
இதற்காக கடந்த மாதம் 23ந் தேதி, பரங்கிப்பேட்டை வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். பரங்கிப்பேட்டை வழக்குரைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயபால், செயலர் துரை பிரேம்குமார் தலைமையில் வழக்குரைஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதித்தன. இதேப்போன்று பண்ருட்டி, நெய்வேலியிலும் ஆதரவு தெரிவித்து வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோமதி சக்தி ஸ்வரூப் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், 5ல், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்த போது, சேலத்தைச் சேர்ந்த நிர்மலா அண்டு கம்பெனி வழக்கில், ஆவணங்களை திருத்தி லஞ்சம் பெற்றதாக, கம்பெனி நிர்வாகத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
இப்புகார் குறித்து விளக்கம் கேட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி 24, ஜூன் 27, செப்டம்பர் 20 மற்றும் நவம்பர் 28ம் தேதிகளில் சம்மன் அனுப்பியும் விளக்கம் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற ஆட்சி மன்ற நிர்வாகக் குழு, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப்பை, பொதுநலன் மற்றும் வழக்கின் சூழ்நிலையைக் கருதி, தற்காலிக பணி நீக்கம் செய்ய, பரிந்துரைத்ததை ஏற்று, தற்காலிக பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக பணி நீக்க உத்தரவை, கோமதி சக்தி ஸ்வரூப்பிடம் கொடுக்க, கடலூர் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி சண்முகநாதன், சிதம்பரம் மாஜிஸ்திரேட் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர், நேற்று மதியம் பரங்கிப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் குடியிருப்பிற்கு வந்தனர்.
அங்கு மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப் வீடு பூட்டப்பட்டிருந்தது. பின்னர், கடலூரில் உள்ள அவரது சொந்த வீட்டிற்குச் சென்றனர். அங்கும் அவர் இல்லை. அதைத் தொடர்ந்து, பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது குடியிருப்பில், மாலை, 3.30 மணிக்கு தற்காலிக பணி நீக்கல் உத்தரவு கடிதத்தை வீட்டின் கதவில் ஒட்டினர்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட மாஜிஸ்திரேட் கோமதி சக்தி ஸ்வரூப், தேர்தல் விதிமுறை மீறிய வழக்கில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இம்மாதம் 4ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். அன்றைய தினம் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஜெயலலிதா கடலூர் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment