Islamic Widget

October 30, 2011

அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை: பானர்ஜி



சென்னை: சென்னையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது.
அதில் யுரேனியம் நிரப்பப்பட்டு மின் உற்பத்திக்கான ஒத்திகை நடந்துகொண்டு இருக்கிறது. அத்துடன் உயரழுத்த மின் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் திடீரென வேலைகளை நிறுத்தினால் பெரும் ஆபத்து ஏற்படும். இதனால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அணுமின் நிலையத்தில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை என்றால், அணு உலையின் குளிரூட்டும் எந்திரம் பாதிப்புக்குள்ளாகும். இதனால், பேராபத்து விளையக் கூடும்.

எனவே, அணு உலை பணிகளை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை. அணு உலை பணிக்கு செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது சரியான செயல் அல்ல. கூடங்குளம் அணு உலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, பணிக்கு செல்பவர்களை தடுக்கக்கூடாது," என்றார் ஸ்ரீகுமார் பானர்ஜி.
இந்த நிலையில், இந்திய அணுசக்தி கழகத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தேவையற்ற பீதியை கிளப்புவதாக கூடங்குளம் போராட்டக்குழு கண்டித்துள்ளது.
இதுகுறித்து கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இதுபோன்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதால் தங்களது போராட்டம் கைவிடப்பட்டுவிடாது என்றார். மேலும், வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தங்கள் மீது சுமத்துவதும் கண்டிக்கத்தகக்து என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment