Islamic Widget

March 09, 2011

தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டிவனம் பெரியதச்சூரை சேர்ந்த குரு அப்பாசாமி பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 13.4.11 அன்று நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதிவரையும் நடத்தப்பட உள்ளது. இந்த 17 லட்சம் பேரின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய தேர்வுகள் இவை. இந்தத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் அவர்களின் வாழ்க்கையும் முடிவாகிறது. தேர்வு நாட்களில் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் மூலம் அதிக ஒலியை எழுப்பப்படும். இது மாணவர்களின் படிக்கும் உரிமையையும், படிப்பையும் பாதிக்கும். எனவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இதுபோல் தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு மக்கள் சக்தி கட்சி, மயிலாடுதுறை வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் ஆகியோரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. குரு அப்பாசாமி தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தும், தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment