Islamic Widget

January 12, 2011

புறவழிச்சாலை வழியாக பஸ்கள் செல்வதை கண்டித்து புவனகிரியில் சாலை மறியல்

புவனகிரி : சிதம்பரம் செல்லும் பஸ்கள் புவனகிரிக்கு வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதை கண்டித்து புவனகிரியில் நேற்று சாலை மறியல் நடந்தது. புவனகிரியைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூர், புதுச்சேரி, சென்னை போன்ற நகரங்களுக்குச் செல்ல புவனகிரி பஸ் நிலையம் வந்து செல்வது வழக்கம்.


சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு புறவழிச் சாலை பணி நடந்து முடிந்த நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் புவனகிரி வழியாக செல்லாமல் புறவழிச் சாலையில் சென்றனர். இதனால் புவனகிரி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புவனகிரி வழியாக பஸ்கள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் புறவழிச் சாலையையே பயன்படுத்தின. இதனை கண்டித்து புவனகிரி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் நேற்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., மோகன், ஆர்.டி.ஓ., ராமராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பேச்சுவார்த்தையில், சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புறவழிச்சாலை துவங்கும் வரை புவனகிரி வழியாகச் செல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு பஸ்சிலும் புவனகிரி வழி என போர்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மீறி புறவழிச்சாலையை பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சாலை மறியலால் மாலை 5 மணி முதல் 6 வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
source: dinamalar

No comments:

Post a Comment