Islamic Widget

January 11, 2011

ரூ.2000 கொடுத்தால் 2 நாளில் ரேஷன் கார்டு - ஊனமுற்ற தம்பதியிடம் பேரம்

மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை பயன்படுத்திக் கொண்டு, ரூ.2000 கொடுத்தால் 2 நாளில் ரேஷன் கார்டு பெற்றுத் தருவதாக ஊனமுற்ற தம்பதியிடம் இடைத்தரகர்கள் பேரம் பேசிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ள பனைக்குளம் என்ற ஊரில் வசித்து வரும் அப்துல் ரஹீம் - ஸப்ராபானு என்ற ஊனமுற்ற தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அப்துல் ரஹீம் சைக்கிள் மெக்கானிக் வேலையும், ஸப்ரா பானு தையல் வேலையும் செய்து வருகின்றனர். திருமணத்திற்குப் பின் குடும்ப அட்டை பெற வேண்டி மாவட்ட நிர்வாகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்க மேலாகியும் குடும்ப அட்டை இன்று வரை கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று குழந்தையுடன் தவழ்ந்து வந்து முறையிட்டனர். ஊனமுற்ற தம்பதிக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சரியாக பதிலளிக்காததால் வேதனையடைந்த தம்பதியினர் கதறி அழுதனர். மேலும் அதிகாரிகளை நோக்கி சாபம் விட்படியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலில்ருந்து தவழ்ந்தபடி வெளியேறினர். இச்சம்பவம் மனு அளிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த பொதுமக்களை மனவேதனை அடையச் செய்தது.அப்போது அப்துல் ரஹிம் ”ஓட்டு போடுவதற்கு மட்டும் பனைக்குளத்திலிருந்து கார் மூலம் அழைத்து வந்து ராமநாதபுரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்கின்றனர்; அதே சமயம் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தால் பல ஆண்டுகள் அலைக்கழிக்கின்றனர். இவர்களது மெத்தனப் போக்கை பயன்படுத்திக் கொண்டு 2000 ரூபாய் கொடுத்தால் இரண்டே நாளில் குடும்ப அட்டை பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். மனிதாபிமானம் செத்துவிட்டது. இனி இவர்களிடம் முறையிடப் போவதில்லை” என்று வேதனை பொங்க கூறினார்.
இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் - மனைவி இருவருமே ஊனமுற்றுள்ள நிலையில், அவர்களது அடிப்படை உரிமையான குடும்ப அட்டையை வழங்க மெத்தனம் காட்டி வரும் அரசு அதிகாரிகளின் மனிதாபிமானம் அற்ற செயலும் ஊனமுற்ற இந்த தம்பதியினரே உழைத்து பிழைக்கும் போது அவர்களிடமிருந்து ரூ.2000-த்தை பறிக்க முயலும் இடைத்தரகர்களின் மிருகத்தனமான பேரமும் ராமநாதபுரம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 
Source:.inneram photos:tntjpno

No comments:

Post a Comment