Islamic Widget

November 22, 2010

சிதம்பரம் வடிகால் பாலம் பணி கிடப்பில் : நகரில் மழைநீர் சூழும் அபாயம்

சிதம்பரம் : சிதம்பரம் நகரில் முக்கிய வடிகால் பாலம் கட்டும் பணி முடியாமல் ஒரு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பருவ மழை துவங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிய வழியில்லாமல் நகர் தத்தளிக்கும் அபாயம் உள்ளது. சிதம்பரம் நகரின் வடக்கு மற்றும் நகர் பகுதிகளில் மழை, வெள்ள காலங்களில் தேங்கும் தண்ணீர் கோவிந்தசாமி நகர் பாலம் வழியாக பாலமான் ஆற்றில் வடிகிறது.

வடக்கு மெயின்ரோடு பகுதியில் இருந்து பிரியும் தில்லையம்மன் வடிகால் வழியாக கோவிந்தசாமி நகர் வடிகால் பாலத்திற்கு தண்ணீர் வரும். இந்த வாய்க்கால் தூர்ந்து தண்ணீர் வடியாமல் மழைக் காலங்களில் அடிக்கடி நகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதுநாள் வரை இந்த வடிகால் முழுமையாக தூர்வாரப்படாமலும், ஆகாயத்தாமரை செடிகள் மண்டியும் மக்கள் பாதிப்பிற்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. வாய்க்கால் தூர்ந்துள்ளது ஒருபுறம் என்றாலும், நகரின் முக்கிய வடிகாலாக உள்ள கோவிந்தசாமி நகர் பாலம் தற்போது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.


மழைக்காலங்களில் 10க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையை போக்க பாலத்தை கட்ட அந்த வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் நகராட்சியில் கோரிக்கை வைத்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் வரை சென்று கடும் முயற்சியின் பலனாக 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பணி துவங்கியது. பாலம் கட்டப்பட இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெரும் தடையாக இருந்ததால் ஆரம்பத்திலேயே பணி தடைபட்டது. பல போராட்டங்களுக்கு இடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மூன்று மாத இடைவெளிக்கு பின்பு மீண்டும் பணி துவங்கியது. பில்லர் போடப்பட்டு ஓரளவு பணிகள் நடந்தது. ஆனால் அதன் பிறகு கான்ட்ராக்ட் எடுத்தவர் நகராட்சி சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்தும் பணியை தொடரவில்லை.

பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால் இந்த வழி துண்டிக்கப்பட்டது. இதனால் இப்பாலம் வழியாக கோவிலாம்பூண்டி, மீதிக்குடி, முத்தையா நகர், சரஸ்வதி நகர், அண்ணாமலை நகர் பகுதிக்குச் செல்லும் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சிதம்பரம் நகரின் முக்கிய வடிகால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த லேசான மழைக்கே தில்லையம்மன் நகர், பள்ளிப்படை, வாகீச நகர், கோல்டன் நகர் உள்ளிட்ட பல நகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். பருவ மழை கடுமையாக பெய்யும் பட்சத்தில் சிதம்பரம் வடக்கு பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே பாலம் கட்டுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்த்து அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அல்லது நகரில் தண்ணீர் வடிய தற்காலிகமாக மாற்று வடிகால் ஏற்படுத்தினால் மட்டுமே சிதம்பரம் நகரில் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதை தடுக்க முடியும்

Source:dinamalar

No comments:

Post a Comment