Islamic Widget

November 15, 2010

ஜெத்தா: நாலரை இலட்சம் ரியால் திருட்டு - இருவர் கைது

ஹஜ் யாத்ரிகர்களுக்கான போக்குவரத்து நிறுவனமொன்றின் வாகனத்தை உடைத்து அதிலிருந்த சுமார் 450,000/ச.ரியால்களைத் திருடியதாக இரண்டு எத்தியோப்பியர்களை சவூதி பாதுகாப்புத்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.


 அந்நிறுவனத்தின் 41 வயது பிரதிநிதியொருவர் இத்தொகையை வங்கியில் செலுத்த எடுத்துச்சென்ற வேளை, இத்திருட்டு சம்பவித்துள்ளது. வங்கிக்கு செல்லும் வழியில் துரித உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தி கதவுகளை நன்கு அடைத்துச் சென்ற போதும், ஒருசில நிமிடங்களில் வண்டியின் சாளரக்கதவை உடைத்து பணம் திருடப்பட்டதாம்.
தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், சுற்றுவட்டாரம் முழுக்க சோதனைச்சாவடிகளை அமைத்து சோதனை செய்ததில், காவல்துறையினரைக் கண்டு ஓட முயன்ற இரு எத்தியோப்பிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, நிருபர்களிடம் பேசிய ஜெத்தா காவல்துறை மக்கள் தொடர்பாளர் மிஸ்ஃபர் அல் ஜுஐத் "விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், பொதுமக்கள் தன்னந்தனியாக பெருந்தொகையை எடுத்துச்செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
சவூதி உள்நாட்டு அமைச்சகம், முன்னதாக அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில், பெருந்தொகைகளை எடுத்துச்செல்லும் கணக்கப்பிள்ளைகள் ஒரு பாதுகாவலரையும் உடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதையும் மிஸ்ஃபர் குறிப்பிட்டத் தவறவில்லை.

Source:inneram

No comments:

Post a Comment