"ரஜினிகாந்த் மீது யாராவது தீவிரவாத செயல் புரிந்தார் என்று வழக்கு போட முடியுமா?. அப்படி செய்தால் தமிழகத்தில் என்ன நடக்கும்?. தமிழகமே கொந்தளிக்கும்" என்று தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் கூறியுள்ளார்.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி தடுக்கப்பட்ட ஆயுதங்கள் கைவைத்திருந்தது தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.
சமீபத்தில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் பேட்டி வழங்கியுள்ளார். அதில், "எனக்குப் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் இந்தித் திரையுலகில் யாருமே எனக்கு துணை நிற்கவில்லை. யாருமே என்னை ஆதரிக்கவில்லை. நான் முதன் முதலில் கைது செய்யப்பட்டபோது, என்னைப் பற்றி ஒரு திரையுலகப் பிரமுகர் கூட கவலைப்படவில்லை. என்னுடன் தொடர்பு இல்லாதது போல காட்டிக்கொள்ளவே முயன்றனர்.
அப்போதெல்லாம் அவர்கள் மீது எனக்குக் கோபம் வரும். ஆனால் போகப் போக நான் அதைப் பழகிக் கொண்டு விட்டேன். இப்போதெல்லாம் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.
ஒரு துறையைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரச்சனை என்றால் அத்துறையைச் சேர்ந்த அனைவருமே துணை நிற்க வேண்டும். அப்படி நின்றால் இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நம்மைத் துரத்திக் கொண்டிருக்காது என்று கருதுகிறேன்.
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் ரஜினிகாந்த் மீது யாராவது தீவிரவாத செயல் புரிந்தார் என்று வழக்கு போட முடியுமா?. அப்படி செய்தால் தமிழகத்தில் என்ன நடக்கும்?. தமிழகமே கொந்தளிக்கும்.
யாரும் அவர் மீது வழக்குப் போட முடியாது. அதுதான் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு தமிழகத்தில் உள்ள சக்தி. ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமே ரஜினிக்கு ஆதரவாகத் திரளும். ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை என்பது வருத்தத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.
Source: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment