Islamic Widget

September 23, 2010

அயோத்தி சர்‌ச்ச‌ை நாளை தீர்ப்பு இல்லை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது; டென்ஷன் குறைந்தது





புதுடில்லி : அயோத்தி இட விவகாரத்தில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்புக்கு சுப்ரீ‌ம் கோர்ட் ( இன்று 23 ம் தேதி மதியம் ) இடைக்கால தடை விதித்தது. ஒரு வார காலம் தடை இருக்கும், இது தொடர்பான விசாரணை மீண்டும் வரும் 28 ம் தேதி நடக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கும் நோட்டீஸ் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை ( வெள்ளிக்கிழமை ) தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ நடைபெறாமல் தடுக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க எல்லா மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மாநில அரசுகளும், போலீசாரைக் குவித்து முழு கவனத்தில் உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், தீர்ப்பு வரும் நாளன்று மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.




தடை கோரி மனுத்தாக்கல் செய்தவர்: ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் இந்த தீர்ப்புக்கு தடை வழங்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது., தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த தீர்ப்பின் எதிரொலியாக வன்முறை ஏற்படலாம் என்பதால், அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உ.பி., மாநிலம், அயோத்தி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.தீர்ப்பு வரும் வரை, மாநிலத்தில் எவ்வித அமைதிப் பேரணிக்கும் அனுமதியில்லை என உ.பி., அரசு அறிவித்துள்ளது. பேரணி நடத்துவதற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதற்காக, பல்வேறு பொது நல அமைப்புகள் அமைதி பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்று இருந்தன. இருப்பினும் நேற்று அனைத்து பேரணிகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதே போல், நாளை பட்டாசுகள் வெடிக்கவோ, இனிப்பு வழங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

4,000 பேருக்கு சம்மன்: உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ., - பகுஜன் சமாஜ் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 4,812 பேருக்கு கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டுள்ளது. தீர்ப்புக்கு பிறகு எவ்வித நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதற்காக இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதே போல், முஸ்லிம் மத தலைவர்களும் தங்கள் மதத்தினரிடம் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக போலீசார், கோவில் நிர்வாகிகள் மற்றும் மசூதிகளின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.உ.பி.,யில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களோ, பேரணி நடத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் முழுவீச்சில் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தில் இரும்பு தடுப்புகளை அமைப்பதற்காக நான்கு கோடி ரூபாயும், கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி உத்தரவு: உ.பி., மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் தங்கியிருக்க வேண்டும். மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கர்நாடகா: உ.பி.,யில் நிலைமை இப்படி என்றால், கர்நாடகாவில் அயோத்தி தீர்ப்பு வருவதையொட்டி நாளையும், நாளை மறுதினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சிதம்பரம் வேண்டுகோள்: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளன்று மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். அமைதியையும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வழக்கில் வெற்றி பெற்றவர்களோ, தோல்வி அடைந்தவர்களோ அப்பீல் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த விஷயத்தில் பொது நல அமைப்புகள் அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்ட வேண்டும். தீர்ப்புக்கு பின் யாரும் வதந்திகளை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மக்கள் எவ்வித பயமின்றி, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நரேந்திர மோடி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி விடுத்த வேண்டுகோளில், "நாளை தீர்ப்பு வருவதையொட்டி, மக்கள் அமைதி காக்க வேண்டும். தீர்ப்பு எப்படியிருந்தாலும் அதற்காக யாரும் உணர்ச்சிவசப்பட்டுவிடாமல், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைதி காத்திட வேண்டும்' என, கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளா: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், கேரளாவில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் விடுத்த வேண்டுகோளில்," தீர்ப்பு எப்படி இருந்தாலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காக்க ஒத்துழைக்கும்படி' கேட்டுக்கொண்டுள்ளனர். இடதுசாரி கட்சி ஆளும் மேற்குவங்கத்தில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment