Islamic Widget

August 27, 2010

ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்;

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள்... 
பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.


வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.

பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.

பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.

பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)

"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார்.  ஸஹீஹ் புகாரி ஹதீஸ்.349.

No comments:

Post a Comment