Islamic Widget

June 09, 2012

காவல்நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்க மத்திய அரசு உத்தரவு!

புதுடெல்லி:முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் இதுத் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டரையோ அல்லது சப்-இன்ஸ்பெக்டரையோ நியமிக்க இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து விளக்கம் அளித்து இம்மாதம் இறுதியில் அறிக்கை சமர்ப்பிக்கவும் கடிதத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சச்சார் கமிட்டியின் சிபாரிசின் அடிப்படையிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதுத் தொடர்பாக மாநிலங்களுக்கு அனுப்பிய செய்தியைக் குறித்தும் உள்துறை செயலாளர் கடிதத்தில் நினைவூட்டியுள்ளார்.
சச்சார் கமிட்டியின் இந்த சிபாரிசை அமல்படுத்த மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சிபாரிசு அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவிக்கவேண்டும். தொடர் நடவடிக்கைகள் டிசம்பரில் பரிசோதிக்கப்படும். வருடத்தில் இருமுறை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்து மத்திய உள்துறைக்கு தெரிவிக்கவும் மாநில முதன்மை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கே இந்த சிபாரிசு என்று சச்சார் கமிட்டி தமது அறிக்கையில் கூறியிருந்தது.
முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆராய நீதிபதி ராஜேந்திர் சச்சார் தலைமையிலான குழுவை கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு நியமித்தது.
மாநில அரசுகள், பல்வேறு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகிய அனைத்து தரப்பினரிடமும் விரிவான சந்திப்பை நடத்திய பிறகே சச்சார், தனது அறிக்கையை தயார் செய்தார்.

No comments:

Post a Comment