Islamic Widget

June 10, 2012

கார்களில் கறுப்பு பிலிம் அகற்றம்: 20 நாளில் ரூ.30 1/2 லட்சம் அபராதம் வசூல்


கார்களில் கறுப்பு பிலிம் அகற்றம்: 20 நாளில் ரூ.30 1/2 லட்சம் அபராதம் வசூல்சென்னை, ஜூன்.10-

கறுப்பு பிலிம் ஒட்டப்பட்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக ஏராளமான புகார்கள் ஏழுந்தன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் டெல்லியில் காருக்குள் வைத்தே இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் கார்களில் ஒட்டப்பட்டுள்ள சன் கண்ட்ரோல் கறுப்பு பிலிமை அகற்ற போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று சுப்ரீம்கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. கார்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கறுப்பு பிலிமை அகற்றுவதற்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிமை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் 20-ந்தேதி போக்குவரத்து போலீசார் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கார் கண்ணாடிகளில் ஒட்டப்பட்ட கறுப்பு பிலிம்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தனர். போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் கார்களில் கறுப்பு பிலிம்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 20 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கார் உரிமையளர்களிடமிருந்து ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் 30 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கார் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கறுப்பு பிலிம்களை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். போலீஸ் சோதனையின்போது சிக்கினால் நிச்சயம் அவகாசம் அளிக்கப்படாது. உடனடியாக ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். 2-வது முறை மீண்டும் கறுப்பு கண்ணாடியுடன் சிக்கினால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் கார்களுக்குள் நடக்கும் குற்றங்கள் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment