Islamic Widget

March 13, 2012

காரைக்காலில் முதல் தனியார் விமான நிலையம்

நாட்டின் முதல் தனியார் பசுமை கள விமான நிலையம் காரைக்காலில் தொடங்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இது செயல்படத் தொடங்கும் என்று சூப்பர் தனியார் விமான நிலைய நிறுவனத்தின் தலைவர் ஜே.வி.சௌத்ரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை கூறியது:
நாடு முழுவதும் சுமார் 14 பசுமை கள விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. இதில் நாட்டிலேயே முதல் முறையாக 100 சதவீதம் தனியார் விமான நிலையம் காரைக்காலில் தொடங்கப்படுகிறது.

இது அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும். இதர 13 விமான நிலையங்கள் பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படுகிறது.
காரைக்காலில் கட்டப்பட உள்ள பசுமை கள தனியார் விமான நிலையம் சுமார் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவு பெறும்.
முதல் கட்டமாக ரூ.150 கோடியில் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமான ஓடுதளம் அமைக்கப்படுகிறது. அதேபோல 250 பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்படும்.
மேலும், கூடுதலாக 162 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் மேலும் 2.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்து, ஆயிரம் பயணிகள் வந்து செல்வதற்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இப்பகுதியில் விமான நிலையம் அமைவதன் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக தலங்கள், சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். திருச்சி விமான நிலையத்துடன் இணைப்பு போக்குவரத்துக்கும் இது உதவும்.
முற்றிலும் வணிக ரீதியில் தொடங்கப்படும் இந்த விமான நிலையத்துக்கு பயன்பாட்டுக் கட்டணம் விமானத்துக்கு விமானம் மாறுபடும். விமானப் போக்குவரத்து நிலவரத்தைப் பொறுத்து கட்டணம் விதிக்கப்படும் என்றார்.
சூப்பர் தனியார் விமான நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கே.ராமலிங்கம் மற்றும் இயக்குனர்கள் டி.கே.தாஸ், ஜே.பாலு உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment