
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இயற்கை ஆர்வலர்கள் அதை எதிர்க்க ஆரம்பித்தன்ர். பல்வேறு போராட்டங்களை அமெரிக்கா பல்கலை கழகங்களில் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் உதயகுமார் தலைமையில் நடத்தி வந்தனர். ஆனால் அவை வெகுஜன மக்களைக் கவரவில்லை. இவர்களின் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காகவே அப்பகுதியைச் சேர்ந்த பாமர மக்களின் குடியிருப்புகளை நவீனபடுத்தி அவர்களிடம், "கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்தால் அப்பகுதி முழுவதும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும்" என்ற மாயையை உருவாக்கியது அரசு. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பாமரமக்கள் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
அந்தப் பாமர மக்களிடம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதிப்புகள் குறித்து உணர வைக்கவே அவர்களுக்கு 20 வருடம் தேவைப்பட்டுள்ளது. ஒரு வழியாக ஒட்டு மொத்த மீனவ மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் அரசு எந்த வசதி செய்து தந்தாலும் அது தேவையில்லை. அணு மின் நிலையம் அமையக்கூடாது என்பதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் செப்.11 முதல் 22ம் தேதி வரை 12 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
ஆரம்பத்தில் இவர்களது போராட்டத்தைக் கண்டு கொள்ளாத தமிழக அரசு, பாமர மக்களின் பட்டினி போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு அஞ்சி போராட்டக் குழுவினக்ச் சென்னைக்கு அழைத்து பேசியது. அப்போது போராட்ட குழுவினருடன் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றும், "போராட்டக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றும் உறுதியளித்தார். ஜெயலலிதாவின் ஏமாற்று பேச்சு வார்த்தையைத் தலை சாய்த்து ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து தமிழகஅரசு சார்பில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் அடங்கிய அரசு குழுவும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான 13 பேர் கொண்ட ஒரு குழுவும் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அக்.7ம் தேதி சந்தித்துத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது பிரதமர் மன்மோகன்சிங், "மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு உருவாக்கப்படும். அந்தக்குழு கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும்" என்று தமிழகக்குழுவிடம் வெற்று சாக்குப்போக்கைத் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று இடிந்தகரையில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்குப் பதிலாக 9ம் தேதி விளக்கக் கூட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையே, "கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினார்.
இதையறிந்த போராட்டக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். விளக்கக் கூட்டத்திற்குப் பதிலாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை நடத்த முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை கூடன்குளம், இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் போராட்டம் குறித்து பிரசாரம் செய்தனர்.
இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன்பு திட்டமிட்டபடி இன்று அடையாள உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அணுசக்தி எதிராக கலைக்குழுவினர் பாடல்களைப் பாடினர்.
உண்ணாவிரதத்தையொட்டி கூடங்குளத்தில் முழு கடையடைப்பு நடந்தது. இதனால் ஊர் வெறிச்சோடி காணப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் ஏமாற்று பேச்சு வார்த்தைகளில் போராட்டத்தின் வீரியத்தைக் கூடங்குளம் மக்கள் குறைத்து விடாமல் அணுமின் நிலையத்தை மத்திய அரசு இழுத்து மூடும் வரை பட்டினி போராட்டத்தின் களம் வலுவடைய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்
No comments:
Post a Comment