Islamic Widget

October 28, 2011

சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!

சக சவுதி தம்பதி மீது 'வேண்டுமென்றே' வாகனம் ஏற்றிக் கொன்ற சவூதிக்காரர் ஒருவருக்கு சவூதி அரேபிய நீதிமன்றத் தீர்ப்புப் படி மரணதண்டனை நேற்று(வியாழன்) நிறைவேற்றப்பட்டது.முஹம்மது அல் ஹர்பி என்னும் பெயருடைய அந்த ஆள், ராபிஹ் அல் அசீரி என்பவரையும் அவருடைய மனைவி நசீலா அல் அசீரி என்பவரையும் வேண்டுமென்றே வாகனம் ஏற்றிக் கொன்ற குற்றத்திற்காக, சவூதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்திருந்தது.


அதன்படி, நேற்று வியாழனன்று மேற்கு மாகாணத்திலுள்ள குன்ஃபுதா என்னும் நகரில் கொலையாளியின் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனுடன், இதுவரை இவ்வாண்டு சவூதி அரேபியாவில் உயிர்ப்போக்குத் தண்டனை பெற்றவர்கள் எண்ணிக்கை 66 ஆகியுள்ளது.

இந்நிலையில், இவ்வகை தண்டனையை நிறுத்தி விடும்படி ஐ.நாவின் மனித உரிமைகள் பிரிவு சவூதி அரேபிய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டளவில் தனது கடுமையான தண்டனைகளின் மூலமே குற்றங்கள் குறைந்து காணப்படுவதாக சவூதி அரேபியா தெரிவிக்கிறது.

இம்மாதத் தொடக்கத்தில் ஆயுதமேந்தி கொள்ளையடித்த எட்டு வங்கதேசத்தவர், இரண்டு சவூதியர் ஆகியோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது முதல், ஐ.நா மனித உரிமைகள் குழு 'இத்தகு தண்டனை'களை நிறுத்திவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வன்புணர்வு, கொலை, மதக்குழப்பம், ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக சவூதியில் மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment