Islamic Widget

April 01, 2011

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வைகோ: போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேற்று இரவு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் மூலம், அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வுடனான ஊடல் நேற்று முடிவுக்கு வந்தது.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கும் வைகோ, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற வேண்டுமென, ம.தி.மு.க., தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வைகோ விடுத்த கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கவில்லை. 9 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முடியும் என அ.தி.மு.க., தெரிவித்ததால், தேர்தலைப் புறக்கணிக்க ம.தி.மு.க., முடிவு செய்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்ற வைகோ, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், "யாருக்கு நாங்கள் ஓட்டளிப்பது' என தொண்டர்கள் கேட்டதையடுத்து அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலுக்காக மாவட்டவாரியாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வைகோ திட்டமிட்டிருந்தார். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார்.இதற்கிடையில், "தேர்தல் புறக்கணிப்பு மூலமாக, மீண்டும் தி.மு.க., வெற்றி பெறுவதற்கு நாமே காரணமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதைத் தடுக்கும் வகையில், பொதுச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, கோவை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் செயலர்கள், வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அ.தி.மு.க., வட்டாரத்திலிருந்தும் வைகோவிற்கு சமிஞ்சைகள் அனுப்பப்பட்டுள்ளன. "புதிய பார்வை' இதழின் ஆசிரியர் நடராஜன் சமீபத்திய பேட்டியின்போது, "வைகோவை அ.தி.மு.க., இழந்திருக்கக் கூடாது' என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், வைகோவுடன் பேசுவதற்கு தொடர் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், "உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிறபோது, உங்களிடம் பேசுவதில் பலனில்லை. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நானாக மாற்றுவதற்கில்லை' என்று, வைகோ தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரத்தில் இருந்த ஜெயலலிதாவிற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பார்வதி அம்மாள் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி சென்றிருந்த வைகோவிடம், நேற்று மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா, டெலிபோனில் பேசியுள்ளார். 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், நேரில் வந்து சந்திப்பதாக வைகோ கூறியுள்ளார்.கன்னியாகுமரியில் மாலை 4 மணிக்கு நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ, அங்கிருந்து கார் மூலம் மதுரை விரைந்தார். மதுரையில் இருந்து இரவு 8.55 மணிக்கு சென்னை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் இரவு 10.15 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து கிளம்பி, இரவு 11 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். ஜோலார்பேட்டை, வேலூரை அடுத்து, காஞ்சிபுரத்தில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, பிரசாரத்தை முடித்துவிட்டு போயஸ் தோட்டம் திரும்பியிருந்தார். இருவரும் 15 நிமிடங்கள் நேருக்கு நேர் பேசினர். தகவல் தெரிந்த பத்திரிகையாளர்கள், வெளியில் வந்த வைகோவிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், வைகோ காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பாடுபடுமாறு, இன்று தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு விடுப்பார் என, தாயக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்' என்ற பாரதியாரின் கவிதை வரியை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அரசியலில் எதுவும் சாத்தியம்; எவருக்கும் வழியும் கிடையாது, மறையும் கிடையாது என்று நம்ப வைத்துள்ளது தற்போதைய அரசியல் போக்கு. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், எப்படியும் மே 13ம் தேதிக்குப் பின், மக்களை முட்டாளாக்கத்தான் போகின்றனர். அதைத் தாங்கும் அளவுக்கு மக்களுக்கு ஒரு மனோதைரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இச்செய்தி. ஒருவேளை உண்மையிலேயே இப்படி ஒரு சந்திப்பு நடந்துவிட்டால், "தினமலர்' பொறுப்பல்ல."அரசியல்வாதிகளைப் போல் நீங்களும் எங்களை முட்டாளாக்கலாமா' என்று கோபப்படும் வாசகர்களுக்கு, ஏப்ரல் முதல் நாள் வாழ்த்துக்கள்...!

 
Source: Dinamalar

No comments:

Post a Comment