Islamic Widget

March 02, 2011

கத்தியைக் காட்டி மிரட்டி பெண்களிடம் நகை கொள்ளை: சிதம்பரத்தில் துணிகரம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்மாபேட்டை முருகேசன் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பஸ் கண்டக்டர்.
நேற்று காலை அவரது தாய் யசோதை, மனைவி சீதாலட்சுமி, தம்பி மனைவி லோகவதி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். முருகானந்தமும், அவர் தம்பியும் வெளியூர் சென்றிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி யசோதை, சீத்தாலட்சுமி கழுத்தில் இருந்த செயின் மற்றும் கடந்த வாரம் திருமணம் நடந்த லோகவதி கழுத்தில் இருந்த தாலிச் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு நிதானமாக நடந்து சென்றுள்ளனர். கொள்ளையடித்துச் சென்ற நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். பீதியில் உறைந்து போன மூன்று பெண்களும் வெகுநேரத்திற்குப்பின் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் அர்ஜூன், நந்தனார் பள்ளி வரை ஓடி நின்றது. கடந்த இரண்டு மாதம் முன் ஆசீர்வாதம் நகரில் என்.எல்.சி., ஓய்வு பெற்ற அதிகாரி மனைவி சாயாதேவி (55) என்பவரிடம் பட்டப் பகலில் மோட்டார் பைக் ஆசாமிகள் 9 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர். மேலும், வரகூர்பேட்டையில் மகனுடன் சைக்கிளில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த செயின் பறிக்கப்பட்ட சம்பவம் என தொடர்ந்து அண்ணாமலைநகர் பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Source: Dinamalar

No comments:

Post a Comment