எகிப்து அதிபராக 30 ஆண்டுகள் பதவியில் இருந்து வந்த ஹோஸ்னி முபாரக் கடந்த 18 நாள்களாக நடந்த மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.எகிப்தில் நிலவி வந்த வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் மற்றும் ஊழல் போன்றவற்றிக்குப் பொறுப்பேற்று ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டும் என கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் மக்கள் வீதிக்கு வந்து போராடினர்.
கூடவே, தொடர்ந்து ஒருவரே பல ஆண்டுகள் அதிபராக நீடிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைத் திருத்தி உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரினர்.மக்களின் கோரிக்கைக்கு எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரர்கள் என்ற கட்சியும் ஆதரவளித்தது. இதனைத் தொடர்ந்து தலைநகர் கெய்ரோவில் மட்டுமே நடைபெற்று வந்த போராட்டம் எகிப்து முழுவதும் பரவியது.மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஹோஸ்னி முபாரக், 2011ஆம் ஆண்டு செப்டம் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தானோ, தன்னுடைய மகனோ போட்டியிட மாட்டோம் என்றும் மக்கள் கோரும் சட்ட திருத்தங்களைச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எகிப்திய வரலாற்றில் முதன் முறையாக துணை அதிபர் பதவியை உருவாக்கி அதில் உமர் சுலைமான் என்பவரையும் அமர்த்தினார்.ஆனால், ஹோஸ்னி முபாரக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் மிக முக்கியக் குறிக்கோளாக இருந்தது. எனவே மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து 10-02-2011 அன்று மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முபாரக், வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்து தாம் பதவி விலகப் போவதில்லை எனவும் மக்கள் கோரிய சட்ட திருத்தங்களைச் செய்ய உடனடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.இம்முறையும் மக்கள் திருப்தியடையவில்லை. போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து 11-02-2011 வெள்ளிக் கிழமை இரவு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.ஹோஸ்னி முபாரக்கின் பதவி விலகல் அறிவிப்பை எகிப்தின் துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்தார். எகிப்தின் அதிபராகப் பதவி வகித்த முஹம்மது ஹோஸ்னி முபாரக் தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளார். நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை இராணுவத்தின் உயர் மட்டக் குழுவிடம் அவர் ஒப்படைத்துள்ளார் என்று உமர் சுலைமான் கூறினார்.உமர் சுலைமானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் கெய்ரோவின் விடுதலைச் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தனர். எகிப்து முழுவதும் மக்கள் சாலைகளுக்கு வந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.Source: inneram
No comments:
Post a Comment