Islamic Widget

January 07, 2011

வாகா எல்லை வழியாக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது பாக்.,: இந்தியா அதிர்ச்சி

இஸ்லாமாபாத் : இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய, பாகிஸ்தான் அரசு திடீரென தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை சந்தித்தது. சந்தையில் ஒரு கிலோ, 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை, திடீரென கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும், மத்திய அரசு மீது கடும் அதிருப்தியும் ஏற்பட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய, மத்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வாகா எல்லை வழியாக லாரிகள் மூலம் தினமும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை 7,000 டன் வெங்காயம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்தது.
இந்நிலையில், தரை வழியாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு, பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்று கருதி, அந்நாட்டு அரசு இந்த தடையை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் அறிவிப்பை தொடர்ந்து, வாகா எல்லை வழியாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றி வந்த 150 லாரிகளை, பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், இரு நாட்டு வியாபாரிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அமிர்தசரஸ் நகரை சேர்ந்த வெங்காய வியாபாரி மேரா கூறியதாவது: பாகிஸ்தான் அரசின் தடை உத்தரவுக்கு முன்னதாகவே, 1,500 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய, அந்நாட்டு சுங்கத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், தடையை காரணம் காட்டி, ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் சுங்கத் துறையினர் மறுத்துவிட்டனர். இதனால், இரு நாட்டு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார். பாகிஸ்தான் முடிவு, "அதிர்ச்சி தருகிறது' என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தெரிவித்தார். ஆனால், கடல் வழியாக மும்பைக்கு வெங்காயத்தை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய, அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் மூலம் 1,300 டன் இறக்குமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 
Source:dinamalar

No comments:

Post a Comment