Islamic Widget

September 22, 2010

அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும்-ஆர்எஸ்எஸ்

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




டெல்லியில் பெண் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடலின்போது அவர் கூறுகையில்,



அயோத்தி இந்துக்களின் மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் தடையாக இருக்காமல் மத வேறுபாடுகளை மறந்து உதவ முன்வர வேண்டும்.



அயோத்தி தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதில் எங்களுக்கு துளியும் சந்தேகமில்லை. தீர்ப்பு குறித்து இப்போது எதையும் கூற இயலாது. தீர்ப்பு வெளியான பிறகே எங்கள் கருத்தை தெரிவிக்க இயலும்.



தீர்ப்பு எப்படி வந்தாலும் சட்டரீதியாக அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அலாகாபாத் நீதிமன்ற உத்தரவு சாதகமாக இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.



அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உறுதி. தீர்ப்பு வெளியான பிறகு எங்கள் தரப்பிலிருந்து எந்த பிரச்சனையும் உருவாகாது. அயோத்தி விவகாரத்தை இரு மதங்களுக்கு இடையிலான பிரச்சனையாக நாங்கள் கருதவில்லை.



பழங்காலமாக இருந்துவரும் நம் தேசிய பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.



ராமர் கோயில் கட்டப்படுமானால் அது சமூக ஒருமைப்பாடு ஏற்பட ஏதுவாக அமையும் என்றார்.



அயோத்தி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்றே கேள்விக்கு, ராமர் கோயில் கட்டும் இயக்கம் பாஜகவுக்கு உதவுகிறது. எங்கள் இயக்கத்தை வழிநடத்தி செல்வதற்கு யார் உதவியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment