Islamic Widget

September 22, 2010

நாளை மறுநாள் அயோத்தி சர்ச்சை தீர்ப்பு : தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

லக்னோ: நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைக்க கோரி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று மதியம் 2 மணிக்கு விசாரித்தது . இந்த மனு தொடர்பாக தடை உத்தரவு பிறப்பிக்க கோர்ட் மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி விட்டது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை (24 ம் தேதி ) தீர்ப்பு வெளிவருகிறது.

அயோத்தி விவகாரத்தில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது. அயோத்தியில் 2 . 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற நீண்ட கால வழக்கில் வெள்ளிக்கிழமை ( 24 ம் தேதி ) அலகாபாத் கோர்ட் தீர்ப்பளிக்க இருக்கிறது. தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.


இந்த தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும், யாரும் யாரையும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது. வரும் தீர்ப்பு முடிவானதல்லை , இதில் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த ஒரு தரப்பினரும் இந்த விஷயத்தில் இறுதியான முடிவு என கருத வேண்டாம். அனைவரும் அமைதி காத்திட வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.
அலகாபாத் ஐகோர்ட்டின் தற்போதைய லக்னோ பெஞ்ச், கடந்த ஜனவரி 11ம் தேதி விசாரணையைத் துவக்கியது. முஸ்லிம்கள் தரப்பிலான வாதம் பிப்ரவரி 25ம் தேதி முடிவுக்கு வந்தது. ராமர் கோவிலுக்கு ஆதரவானவர்களின் வாதம் ஜூலை 7ம் தேதி முடிவுக்கு வந்தது.பிப்ரவரி மாதத்திற்குப் பின், அன்றாட அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. ஜூலை இறுதி வாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், வரும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை வழங்குகிறது.

அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரி கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் , காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்தார். இந்த மனுவை நாங்கள் விசாரித்து தடை விதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யவும் என்று நீதிபதி கூறி விட்டார் . இதனால் வரும் வெள்ளிக்கிழமை (24 ம் தேதி ) தீர்ப்பு வெளிவருகிறது.

Source: dinamalar

No comments:

Post a Comment