புதுடில்லி : ஐ.நா., மூலம் பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஐந்தில் ஒரு பங்கு பகுதி, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,700 பேர் பலியாகியுள்ளனர்; 20 லட்சம் பேர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக, உலகின் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. ஐ.நா., சபையும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சார்பில் 25 கோடி ரூபாய் வெள்ள நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. இதை மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷியிடம் கடந்த 13ம் தேதி தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் அரசு இந்திய நிவாரண உதவியை ஏற்காமல் மவுனம் சாதித்தது. அமெரிக்காவின் தலையீட்டுக்கு பின்னர் நிவாரண உதவியை ஏற்பதாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவின் நிவாரண உதவியை நேரிடையாக பெறாமல், ஐ.நா., வழியாக நிவாரணம் வழங்க வேண்டுமென பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து பரிசீலனை செய்த மத்திய அரசு, ஐ.நா., வழியாக நிவாரண உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நிவாரண உதவியை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறோம். நிவாரண உதவியை விரைவில் வழங்கும் வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஐ.நா., அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இதில், எந்த வழியில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. இவ்வாறு விஷ்ணு பிரசாத் கூறினார்.
Source: Dinamalar
No comments:
Post a Comment