சிதம்பரம்:சிதம்பரத்தில் கோவில் திருவிழா, வாணவேடிக்கையில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து சாம்பலாயின. 10 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் கரை அம்பேத்கர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவில் வாணவேடிக்கை நடந்தது. அதிகாலை வரை தொடர்ந்த வாண வெடியின் போது, அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள வேலு என்பவரது வீட்டின் கூரையில் வாணவெடி ஒன்று விழுந்து தீப்பிடித்தது. காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அப்பகுதி மக்கள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அலறியடித்தபடி குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்தனர்.உடன் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப் பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இருந்தும் மணிகண்டன், குப்புசாமி, செல்வராஜ், வேல்முருகன், பாலு உட்பட 23 பேரின் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. இவ்விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணி வகைகள் என அனைத்தும் எரிந்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.டி.ஆர்.ஓ., நடராஜன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு சார்பில் நிவாரண உதவியாக 2,000 ரூபாய், அரிசி, வேட்டி, சேலை வழங்கினார்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment