Islamic Widget

November 26, 2011

கனமழை: குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்

கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை கன மழை பெய்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை ஒரு வாரமாக ஓய்ந்து இருந்தது, புதன்கிழமை மீண்டும் பெய்யத் தொடங்கியது. வியாழக்கிழமை கனத்த மழையாக மாறியது. வியாழக்கிழமை நாள் முழுவதும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பல குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

கடலூர் நகரில் சாலைகளின் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதால், 50 சதம் வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து மிகவும் தாழ்வாக சென்றுவிட்டன. வடிகால் வசதியில்லாததால் சாலைகளில் தேங்கும் மழைநீர், சாக்கடையுடன் கலந்து வீடுகளுக்குள் புகத் தொடங்கி விட்டது.
கடலூரின் முக்கிய சாலைகள் மீண்டும் மழைநீரில் மூழ்கின. சாலைகள் ஓரளவுக்கு தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்ததால் கனரக வாகனங்கள் சிரமம் இன்றி சென்றன. இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்கு உள்ளாயினர்.
விடாது மழை பெய்தபோதும், வழக்கம்போல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுதவிர அவ்வப்போது 10 நிமிடம், 15 நிமிடம் என்று பலமுறை துண்டிக்கப்பட்டது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர். கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment